

இந்தோனேசிய கடல் பகுதியில் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விமான பயணிகளில் இதுவரை 70 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 92 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமான பயணிகள், விமான பாகங்களை தேடும் பணியில் இந்தோனேசிய கடற்படையினர் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தனர். இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 92 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கடலில் ஆழத்தில் சிக்கியுள்ள விமானத்தின் உடல் பகுதியையும் மீட்க முடியவில்லை.
சுமார் 81 நீர்மூழ்கி வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உடல்களை தேடுவதும் விமான பாகங்களை மீட்பதும் மிகுந்த சவால் நிறைந்ததாக உள்ளது. எனவே மீட்புப் பணி நிறுத்தப்பட்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான விபத்துக்கான காரணத்தை அறிய சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஓராண்டு ஆகலாம் என்று விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.