

அயர்லாந்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஆன் க்ளெரி, டென்னிஸ் கன்னொலி. இருவரும் பல ஆண்டுகள் செலவிட்டு, புதுமையான ஹெல்மெட்களை உருவாக்கியுள்ளனர். அலுமினியத்தால் ஆன இந்த ஹெல்மெட்டில் உள்ள கண்கள் விலங்குகளின் கண்களை ஒத்திருக்கின்றன.
மனிதக் கண்களால் பார்க்க முடியாத பல விஷயங்களையும் இந்த விலங்குகளின் கண்களால் பார்க்க முடியும் என்பதுதான் சிறப்பு. ஒட்டகச்சிவிங்கி, சுறா, பச்சோந்தி, மான் என்று அந்தந்த விலங்குகளின் பார்க்கும் திறன் எப்படி இருக்கிறதோ, அந்தப் பார்க்கும் திறனை ஹெல்மெட்டிலும் உருவாக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான இந்த ஹெல்மெட்டுகள் அயர்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஹெல்மெட்டுக்கு அருகிலும் அந்தந்த விலங்குகளைப் பாடம் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஹை! சுவாரசியமான விஷயமா இருக்கே!
பிரிட்டனில் வசிக்கும் புகைப்படக்காரர், டிசைனர் பார்பேரெல்லா பச்னெர். இவர் லுகோசி, ஸ்பைடர் என்ற இரண்டு சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். கணவர்கள் இருவரும் மனிதர்கள் அல்ல… அவரது செல்லப் பூனைகள். இவர்களின் திருமணம் வெற்றிகரமாகப் பத்தாண்டுகளைக் கடந்துவிட்டது. லண்டனில் உள்ள விலங்குகள் காப்பகத்திலிருந்து இரண்டு பூனைகளைத் தத்தெடுத்துக்கொண்டார் பச்னெர்.
விரைவில் இரண்டு பூனைகளும் அவர் மீது காட்டிய அன்பால், பூனைகளுக்கு ஐந்து வயதானபோது திருமணம் செய்துகொண்டார். ஆன்லைனில் பதிவு செய்து சான்றிதழும் பெற்றுவிட்டார். ’நான் திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். விளையாட்டுக்காகத்தான் பூனைகளைத் திருமணம் செய்துகொண்டேன் என்று சான்றிதழ் வாங்கியிருக்கிறேன்.
மற்றபடி இயற்கைக்கு விநோதமாக நான் பூனைகளுடன் குடும்பம் நடத்தவில்லை. செல்லப் பிராணிகளைச் சிலர் குழந்தைகளாக நினைப்பார்கள். நான் கணவர்களாக நினைக்கிறேன். அவ்வளவுதான்’ என்கிறார் பச்னெர்.
இந்த விஷயம் பூனைகளுக்குத் தெரியுமா?
வான்கூவர் அருங்காட்சியகத்தில் இருந்த பாறை மீன் ஒன்றுக்கு கண்ணில் கண்புரை நோய் ஏற்பட்டுவிட்டது. சில நாட்கள் கண் தெரியாமல் மிகவும் சோர்வாகக் காணப்பட்டது அந்த மீன். கால்நடை மருத்துவர் மார்டின் ஹவ்லெனா பாறை மீனைக் கவனித்து, கண்புரை இருப்பதைக் கண்டறிந்தார். உடனே மயக்க மருந்து கொடுத்து, கண்புரையை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தார். ஒரு மீனுக்கு இத்தனைக் கவனிப்புத் தேவையா என்கிறார்கள். ’மீனுக்கும் பார்வை முக்கியம். மனிதர்களுக்குப் போலவே மீனுக்கும் அறுவை சிகிச்சை மூலம் பார்வை கொடுக்க முடியும் என்பது எவ்வளவு முக்கியமான விஷயம்’ என்கிறார் மார்டின்.
மீனுக்குப் பார்வை கொடுத்த வள்ளல்!
பாரிஸில் வசிக்கும் 50 வயது சயாக் ஜாக்ஸ் பாடிபில்டர். அவருக்கு வசிக்க வீடு இல்லை. பல ஆண்டுகளாக தெருக்களிலும் பூங்காக்களிலும்தான் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தார். கடந்த ஆண்டு பிரெஞ்சு இயக்குனர் ஜுலியன் கெளடிசாட் அந்த வழியே வந்தபோது ஜாக்ஸைப் பார்த்தார்.
அவருக்கு வியப்பாக இருந்தது. உடனே அவரை அழைத்துப் பேசினார். ஜாக்ஸை வைத்து ஒரு குறும்படத்தை எடுத்தார். அதை இணையத்தில் வெளியிட்டார். சில நாட்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்த வீடியோவைப் பார்த்தனர். உடனே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு ஜாக்ஸுக்கு அழைப்பு வந்தது. அவர் எந்த வேலையையும் ஏற்க மறுத்தார். ஜுலியன் பெரும்பாடுபட்டு சம்மதிக்க வைத்தார். இன்று புகழ்பெற்ற பாடிபில்டராக வலம் வருகிறார் ஜாக்ஸ்.
ஒரு குறும்படம் உங்க வாழ்க்கையையே மாத்திருச்சு ஜாக்ஸ்!