Last Updated : 29 Jan, 2015 10:33 AM

 

Published : 29 Jan 2015 10:33 AM
Last Updated : 29 Jan 2015 10:33 AM

இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஷிரானி பண்டார நாயகே மீண்டும் நியமனம்

இலங்கையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டார நாயகே, மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஷிரானி பண்டார நாயகே. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசு கொண்டு வந்த சில சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் இவர் பாதகமாக தீர்ப்பளித்தார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஷிரானியின் பதவியை ராஜபக்சபறித்தார். அதன்பின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மோகன் பெரிஸ் என்பவரை நியமித்தார்.

இந்நிலையில், புதிய அதிபராகப் பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேனா, ஷிரானியை மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபதியாக நியமித்து நேற்று உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை இலங்கை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். தகவல் அறிந்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த ஷிரானிக்கு, வழக்கறிஞர்கள் மலர்ச் செண்டுகள் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இலங்கையில் அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்த சிறிசேனா, “தேர்தலில் வெற்றி பெற்றால், ராஜபக்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி ஷிரானிக்கு மீண்டும் பதவி வழங்குவேன்” என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது ஷிரானிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ள மோகன் பெரிஸ்தான், இலங்கை தேர்தலில் 3-வது முறையாக ராஜபக்ச போட்டியிட அனுமதி வழங்கியவர். ராஜபக்சவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெரிஸ் செயல்பட்டதால், அவர் முன்னிலையில் அதிபர் பதவியேற்க சிறிசேனா மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x