

அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளியுமான பிராங்க் இஸ்லாமுக்கு கவுரவமிக்க மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
லூதர் கிங் கொள்கை வழியில் பிராங்க் இஸ்லாம் ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. லூதர் கிங் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ஹேரி ஜான்சன் இவ்விருதை நேற்று முன்தினம் வழங்கினார்.
மகாத்மா காந்தி மார்ட்டின் லூதர் கிங் இடையே அழிக்க முடியாத தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்ட பிராங்க் இஸ்லாம் இவ்விருது பெருவதில் பெருமை அடைவதாக கூறினார். பிராங்க் இஸ்லாம், உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 15 வயதில் வெறும் 500 டாலர்களுடன் அமெரிக்கா சென்றார். தொழில்முனைவோராக படிப்படியாக முன்னேறினார்.
1993-ல் தனது வீட்டை அட மானம் வைத்து, மேரிலேண்ட் மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை ரூ.50 ஆயிரம் டாலர்களுக்கு வாங்கினார். 2007-ல் தனது நிறுவனத்தை விற்றுவிட்டு தனது எஞ்சிய வாழ்நாளை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார். பல்வேறு கல்வி, கலாச்சார அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.