Published : 21 Jan 2015 09:08 AM
Last Updated : 21 Jan 2015 09:08 AM

72 மணிநேரத்துக்குள் ரூ.1200 கோடி அளிக்காவிட்டால் ஜப்பானிய பிணைக் கைதிகளை கொல்வோம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்

ஜப்பானைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை கழுத்தறுத்து கொல்வோம் என்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ளனர். இராக் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வந்த அவர்களை பன்னாட்டு ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் அவர்களின் முகாம்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்த சில மாதங்களாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதற்கு பழிவாங்கும் வகையில் தங்கள் பிடியில் உள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பிணைக்கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொன்று இணையதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 2 பேரை அவர்கள் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் ஐப்பானைச் சேர்ந்த கென்ஜி கோட்டோ ஜோகோ, ஹருனா யுகாவா ஆகிய இரண்டு பிணைக் கைதிகளை கழுத்தறுத்து கொல்வோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இதில் கென்ஜி கோட்டோ ஜோகோ பத்திரிகை நிருபர். ஹருணா யுகாவா சிரியாவுக்கு சுற்றுலா சென்றவர். இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

தற்போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இஸ்ரேல் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஐப்பான் ஆதரவு அளிக்கும் என்று உறுதிஅளித்தார்.

இந்நிலையில் ஜப்பானிய பிணைக்கைதிகளின் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. பிணைக்கைதிகள் இருவரும் மண்டியிட்டு நிற்க ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் கத்தியை காட்டி ஆவேசமாக பேசுகிறார்.

இரு பிணைக்கைதிகளையும் விடுவிக்க ஜப்பானிய அரசு 72 மணி நேரத்துக்குள் ரூ.1200 கோடியை அளிக்க வேண்டும். இல்லையெனில் இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்வோம் என்று அந்த தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே கூறியபோது, ஜப்பானிய பிணைக் கைதிகளுக்கு தீவிரவாதிகள் எவ்வித கெடுதலும் செய்யக்கூடாது, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இரு பிணைக்கைதிகளையும் விடுவிப்பது தொடர்பாக தீவிர வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜப்பானிய உயர்நிலைக் குழுக்கள் இராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x