

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடந்த சில நாள்களாக நடத்தி வரும் தாக்குதல்களில் சுமார் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தக் கோரி போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி தொடக்கம் முதல் வடக்கு பிராந்திய கிராமங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
“இதுவரை சுமார் 16-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்து கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பயந்து வீடுகளில் ஒளிந்த மக்களை வீட்டோடு சேர்த்து தீவைத்து கொளுத்திவிட்டனர்’ என்று பாபா அபா ஹாசன் என்ற உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.
பாகா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் சடலங்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ‘நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பகுதி பகுதியாக பிரிந்து பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி இதுவரை 2000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் , சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்’ என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வடக்கு பிராந்தியத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.