Published : 20 Jan 2015 10:03 am

Updated : 20 Jan 2015 10:03 am

 

Published : 20 Jan 2015 10:03 AM
Last Updated : 20 Jan 2015 10:03 AM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 4

4

ஆங்கிலேய அரசு ஜோன் மீது வழக்கு தொடுத்தது. நாட்டுப் பற்றுக்காகவா வழக்கு தொடுக்க முடியும்? எனவே மதத்தைப் பயன்படுத்திக் கொண்டது.

‘’பிரான்ஸை இங்கிலாந்தின் பிடியிலிருந்து நீ விடுவிக்க வேண்டும்’’ என்று தெய்வீகக் குரல்கள் தனக்குக் கட்டளையிடு வதாக ஜோன் பலமுறை கூறி யிருந்தார். இதை சாத்தான்களின் குரல் என்றும் சாத்தான்களுடன் உரையாடும் ஜோன் சூனியக்காரி என்றும் கூறியது ஆங்கிலேய அரசு. தூய மைக்கேல், தூய மார்கரெட் போன்றவர்களின் குரல் களைக் கேட்டதாக ஜோன் கூறிய தில் அந்தப் பகுதி பிஷப்பும் கொந் தளித்திருந்தார் (பொறாமை?).


ஜோன் மீது நீதிமன்றத்தில் முதலில் குற்றம் சாட்டியவர் அந்த பிஷப்தான். அவரது எல்லைக் குள்தான் வேண்டுமென்றே ஜோனைக் கைது செய்திருந்தார் கள். நீதிமன்றத்தில் ஜோனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அநாகரிகமானவை. ஒரு கட்டத் தில் “நான் கடவுளுக்கும், ரோமில் உள்ள தெய்வீகத் தந்தைக்கும் மட்டும்தான் பதிலளிப்பேன்’’ என்றார் ஜோன்.

110 குற்றச்சாட்டுகள் ஜோனின் மீது சுமத்தப்பட்டன. வழக்கு முடியாத நிலையில் சிறைக் கொடுமை தாங்க முடியாமல் சிறையின் மேல் தளத்திலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் ஜோன் குதிக்க அவர் மீது தற்கொலை குற்றச்சாட்டும் சேர்ந்து கொண்டது. கத்தோலிக்க மதத்தின்படி தற் கொலை என்பது மாபெரும் பாவம்.

‘’தெய்வீகக் குரல் என்றெல்லாம் கூறுவதை வாபஸ் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் உங் களைத் தீயில் கொளுத்த நேரிடும்’’ என்றது நீதிமன்றம். “தீயின் நடுவில் நின்றாலும் கூறியதைத்தான் தொடர்ந்து கூறுவேன்’’ என்றார் ஜோன்.

அவரது தலை மொட்டை அடிக்கப்பட்டது. 30.5.1431 அன்று அவரை தீக்கிரையாக்கினார்கள். அவர் தெய்வீகப் பெண்ணல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவரது கருகிய உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதற்கு பத்தொன்பது வருடங் களுக்குப் பிறகு பிரான்ஸின் ஏழாம் சார்லஸ் மன்னன் ஆங்கிலேயரை வெளியேற்றினான். பின்னர் பிரான்ஸ் அரசு “ஜோன் மீது சரியான முறையில் விசாரணை நடக்கவில்லை’’ என்று அறி வித்தது. ஜோன் தெய்விக நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

116 வருடங்கள் நடைபெற்ற “நூறு வருடப்போர்’’ ஒரு சீசா விளையாட்டு போல வெற்றிகளை இருதரப்புக்கும் மாறி மாறி அளித்தது. பிரான்ஸ் தரப்பில் மன்னன் இரண்டாம் ஜீன், அவர் மகன் ஐந்தாம் சார்லஸ், மன்னன் ஆறாம் சார்லஸ் போன்றவர்கள் போரின் பல்வேறு கட்டங்களில் பங்கு கொண்டார்கள். மன்னன் இரண்டாம் ரிச்சர்டு, ஐந்தாம் ஹென்றி, மூன்றாம் எட்வர்டு போன்றவர்கள் இங்கிலாந்து தரப்பில் பல்வேறு கால கட்டங்களில் போரிட்டனர்.

இவர்களெல்லாம் சில சாம்பிள்கள்தான். தவிர இப்படிப் போரிட்டவர்களில் சிலரை இரண்டிலுமே சேர்த்துக் கொள்ளலாம் - ஆங்கிலேய - பிரெஞ்சு கலப்பு மணத்தில் பிறந்தவர்கள்.

ராணுவப் புரட்சிகள், அரசியல் புரட்சிகள் என்ற கிழிபட்டுக் கொண்டிருந்த பிரான்ஸ் வேறொரு வகையான புரட்சியை 15 16ம் நூற்றாண்டுகளில் சந்தித்தது. அது கலாச்சார மறுமலர்ச்சி (Renaissance). ஐரோப்பாவின் கலாச்சார மறுபிறப்பு என்றும் இது கருதப்படுகிறது.

ஓவியம், இசை ஆகியவை மட்டுமல்ல, அச்சுக்கலை, கட்டிடக் கலை, சிற்பக்கலை, இலக்கியம் ஆகியவற்றிலும் மாபெரும் மறுமலர்ச்சி உண்டானது.

இந்த காலகட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப் பிணைந்திருந்தன. மறுமலர்ச்சி காலத்தில் அறிவியல் வளர்ந்தது. மதத்துக்கும், மருத்துவத்துக்கும் இருந்த தொடர்பு மெல்ல மெல்ல அறுபடத் தொடங்கியது.

ஒழுங்கமைவு கொண்ட கட்டிடங்கள் எளிமையான கணித அளவு விகிதப்படி அமையத் தொடங்கின. அரைக்கோள வடிவ குவிமாளிகைகள் போன்ற பல புதுமைகள் உருவாயின.

சொல்லப்போனால் இத்தாலி யில்தான் மறுமலர்ச்சி பெருமள வில் தொடங்கியது. ராஃபேல், மைக்கேல் ஆஞ்சலோ, ரோமானோ, பெர்னினி போன்ற பல பிரபலங்கள் இந்த மறுமலர்ச் சியில் முக்கிய பங்கு கொண்டார் கள். எட்டாம் சார்லஸ் மன்னன் பிரான்ஸை ஆட்சி செய்தபோது அவன் இத்தாலி மீது படை யெடுத்தான். இதன் விளைவாகவும் மறுமலர்ச்சி பிரான்ஸில் பெரு மளவில் புகுந்து பரவியது.

பிரான்ஸ் - இத்தாலி போர், பிரபல ஓவியர் மற்றும் சகலகலா வல்லவர் லியனார்டோ டாவின் ஸியை மிக அதிகமாக பாதித்தது. எழுபது டன் வெண்கலத்தை உருக்கி ஒரு மிக பிரம்மாண்டமான குதிரையை வடிவமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் போர் ஆயுதங்களுக்கு அந்த வெண் கலம் பயன்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் போரின் விளைவால் பிரான்ஸுக்கு சென்று தங்க லியனார்டோ டாவின்ஸி ஒத்துக் கொண்டார். கூடவே தன் மாஸ்டர் பீஸ் ஆன மோனோலிசாவையும் எடுத்துச் சென்றார். மன்னர் முதலாம் பிரான்சிஸ் வழங்கிய ஒரு வீட்டில்தான் கடைசி நாட்களை அவர் கழித்தார். அவரது பல ஓவியங்கள் இன்று பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளன.

அடுத்த கட்டமாக அடுத்த புரட்சி ஒன்றும் பிரான்ஸில் ஏற்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களில். இதைத் தொடர்ந்து அரசியல் களங்களில் பெரும் மாற்றங்கள் உண்டாயின.

(இன்னும் வரும்)

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைபாரீஸ்வரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author