

பாகிஸ்தானில் பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு மரண தண்டனை கைதிகள் அடுத்தடுத்து தூக்கில் இடப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.
பெஷாவர் நகர ராணுவப் பள்ளியில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 134 மாணவர்கள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டனர். உலகை அதிரச் செய்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது. இதையடுத்து கடந்த 1 மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகளை பாகிஸ்தான் அரசு தூக்கிலிட்டது. மேலும் சுமார் 500 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் கைதிகள் அடுத்தடுத்து தூக்கில் இடப்படுவதை உடனே நிறுத்தவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் ஆசியா பசிபிக் பிராந்திய துணை இயக்குனர் டேவிட் கிரிஃப்பித்ஸ் கூறும்போது, “எந்த சூழ்நிலையிலும் மரண தண்டனையை நாங்கள் எதிர்க்கிறோம். மேலும் பலரை கொல்வதன் மூலம் வன்முறைக்கு தீர்வு காண முடியாது. பாகிஸ்தானில் நேர்மையற்ற விசாரணைக்குப் பிறகு பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் கைதிகளை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது, சித்திரவதை மூலம் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வது, கைதிகளுக்கு போதிய சட்ட உதவி கிடைக் காதது போன்ற மனித உரிமைக்கு எதிரான போக்கு பாகிஸ்தானில் காணப்படுகிறது. விசாரணையை 7 பணி நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என நீதிபதிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர்” என்றார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத குற்றங்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்துவதற் காக ராணுவ நீதிமன்றங்கள் அமைக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் அண்மையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக உள்நாட்டிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.