

பெல்ஜியம் நாட்டில் நடந்த தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பெல்ஜியத்தில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் மேற்கொண்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் வெளியிட்டதை அந்நாடு முழுவதும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற, தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் போலீஸார் 2 பேரை சுட்டுக்கொன்றனர். ஒருவரை உயிருடன் பிடித்தார்.
அண்மையில், பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரே பெல்ஜியம் அரசுக்கு தீவிரவாதிகள் ஊடுருவல் செய்தி வந்துவிட்டது. எனவே அங்கு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையும் பாரீஸ் தாக்குதலுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.
பாரீஸ் தாக்குதலுக்கும், பெல்ஜியம் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு 2 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். மூன்றாவதாக ஒரு தீவிரவாதி வெர்வியர்ஸ் நகரில் கைது செய்யப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் உள்பட 3 பேருமே பெல்ஜிய நாட்டு குடியானவர்கள் எனத் தெரிகிறது.
சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர்களில் பங்கேற்றுவிட்டு பெல்ஜியம் திரும்பியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், தேசிய அளவில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு பிரதமர் சார்லஸ் மிக்கேல் தெரிவித்துள்ளார்.