

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 2 பிணைக் கைதிகளை மீட்பதற்காக தீவிரவாதிகளை சந்தித்து பேச 2 பேர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து வழிகள் குறித்தும் பரிசீலித்து வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு வீடியோவை வெளியிட்டது. 72 மணி நேரத்துக்குள் ரூ.1,200 கோடியை தராவிட்டால் ஜப்பான் பிணைக் கைதிகள் இருவரையும் கொன்று விடுவோம் என அதில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோ வெளியான நேரப்படி இன்றுடன் காலக்கெடு முடிவடைகிறது.
இதற்கிடையே, பிணைக் கைதிகளை மீட்பதற்காக ஐஎஸ் அமைப்பினரை சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்லாமிய சட்ட நிபுணரும் கியோட்டோவின் தோஷிஷா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான கோ நகட்டா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுபோல நகட்டாவுடன் தானும் செல்ல விரும்புவதாக கடந்த 2010-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பான் பத்திரிகையாளர் கோசுகே சுனேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் யோஷிஹைடு சுகா நேற்று கூறியதாவது:
ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர் கென்ஜி கோட்டோ (47), ஹருனா யுகாவா (42) ஆகிய 2 பேரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை சந்திக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால், வீடியோ வெளியான பிறகு இதுதொடர்பாக எங்களுக்கு தீவிரவாதிகளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.
இந்நிலையில் பிணைக் கைதிகளை மீட்பதற்காக தீவிரவாதிகளை சந்திக்க இருவர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிணைக் கைதிகளை உயிருடன் மீட்பதற்கு உள்ள அனைத்து வழிகள் குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.