

இலங்கை அதிபர் தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜபக்ச விலகி அந்த பொறுப்பை புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் வழங்கியுள்ளார்.
இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் அதிபர் ராஜபக்ச விலகியுள்ளார். அத்துடன் தனது பதவி பொறுப்பை புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார்.
இது தொடர்பாக ராஜபக்ச வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எனது கட்சி உடைவதை நான் விரும்பவில்லை. இன்று முதல் கட்சித் தலைமை பொறுப்பை மைத்ரிபால சிறிசேனா வகிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேனா, சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். ராஜபக்சவின் நெருங்கிய நண்பராகவும் அவரின் வலது கரமாகவும் சிறிசேனா செயல்பட்டார்.
அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 2014 நவம்பர் 21-ம் தேதி எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.