

இந்தியாவுடன் வர்த்தக உறவு கொள்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அரசுகளும் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
உலக பொருளாதார வளர்ச்சி மையத்தின் வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்றுள்ளார்.
மாநாட்டின் 2-ம் நாளான நேற்று, மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே சர்வதேச தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அரசுகளின் தலைவர்களை ஜேட்லி சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் கூறும்போது, “வங்கிகள், காப்பீட்டு நிறுவனங் கள், உற்பத்தி, தொழில்நுட்ப நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விரும்புகின்றன. இதுபோல பல்வேறு நாடுகளும் இந்தியாவுடன் வர்த்தக உறவு கொள்ள விரும்புகின்றன.
வாய்ப்புகளை எதிர்நோக்கும் இவர்களுக்காக தெளிவான வழிகாட்டுதலை அரசு உருவாக்கும்.
மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுவதால் அரசு அவசரச் சட்டங்களை பிறப்பிக்க வேண்டியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று நான் கருதவில்லை. புதிய சட்டங்களால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அவசரச் சட்டம் பிறப்பிப்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையே. மக்களவையி லும், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திலும் எங்களுக்கு பெரும்பான்மை இருப்பது அனைவருக்கும் தெரியும். எனவே தடைகள் மூலம் எதிர்க்கட்சிகள் தாமதப்படுத்த மட்டுமே முடியும்” என்றார்.