

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கில், மரண தண்டனை கைதி ஒருவரை சிறை அதிகாரிகள் நேற்று தூக்கிலிட்டனர்.
பாகிஸ்தானில் மரண தண்ட னைக்கு தடை நீக்கப்பட்ட பிறகு தூக்கிலிடப்பட்ட 7-வது நபர் இவர்.
நியாஸ் முகம்மது (40) என்ற இந்நபர், பாதுகாப்பு மிகுந்த பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலை யில் இவர் நேற்று தூக்கில் இடப்பட்டதாகவும், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தாகவும் சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.
2003-ம் ஆண்டு டிசம்பரில், ராவல்பிண்டி நகரில் முஷாரப் காரில் செல்லும்போது, அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட் டது. ஒரு பாலத்தை அவரது காரும், பாதுகாப்பு வாகனங்களும் கடந்து சென்ற சில வினாடிகளுக்குப் பின் குண்டு வெடித்ததால் அனைவரும் காயமின்றித் தப்பினர்.
பாகிஸ்தானில் மரண தண்ட னைக்கு 6 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இந்நிலை யில் பெஷாவர் நகரில் தலிபான் தாக்குதலில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் கொல்லப்பட்ட பிறகு, மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது.
இதைத் தொடர்ந்து இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள 7 பேரில் 6 பேர் முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். ஒருவர் 2009-ல் ராணுவத் தலைமையகம் மீதான தாக்குதலில் தொடர்புடையவர்.
வரும் வாரங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 500 பேரை தூக்கிலிட திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்புடைய வழக்குகளை விரைவுபடுத்த ராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது சுமார் 8 ஆயிரம் மரண தண்டனை கைதிகள் இருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல் கணக்கிட்டுள்ளது.