

ஈராக்கில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 31 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற் உள்ள வேளையில், கிழக்கு பாக்தாதில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நேற்று ஷியா பிரிவு மக்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். அப்போது அங்கு பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது, தொடர்ந்து இரு குண்டுகள் அடுத்த சில நிமிடங்களில் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 31 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என உறுதியாகி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு அல் கொய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இது குறித்து அந்த தீவிரவாத அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "இது சன்னிப் பிரிவினர்களின் மீது ஷியா அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி" என குறிப்பிட்டுள்ளது.