Last Updated : 07 Jan, 2015 04:45 PM

 

Published : 07 Jan 2015 04:45 PM
Last Updated : 07 Jan 2015 04:45 PM

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: சவால்களோடு களம் இறங்கும் ராஜபக்ச

இலங்கையின் 7–வது அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இலங்கையில் நாளை (வியாழக்கிழமை) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்ச அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து வந்த 2010-ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிபர் பதவியை வகித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் அதிக சவால்களோடு ராஜபக்ச தேர்தல் களத்தில் உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 17 பேர் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேட்சைகள்.

அதிபர் ராஜபக்சவுக்கு நேரடி போட்டியாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் எதிர் கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா(63) இருக்கிறார். மொத்தம் 1,586,598 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 1,076 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் வாழும் மக்களில் 74 சதவீதத்தினர் சிங்களவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு அதிபர் ராஜபக்சவுக்கு இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலை புலிகள் கொல்லப்பட்டதாகவும் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் அறிவித்தது.

இலங்கை ராணுவத்தினரால் புலிகள் வீழ்த்தப்பட்டது சிங்களவர்களுக்கு சாதகமான மாற்றமாக இருந்த நிலையில், உள்நாட்டுப் போரை அடுத்து உடனடியாக வந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றிகண்டார். 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரை ராணுவம் முடிவுக்கு கொண்டுவந்த நிலையோடு இந்த வெற்றி ராஜபக்சவுக்கு கிடைத்தது.

இதே போன்ற வெற்றி மூன்றாவது முறையாக அமையும் என்ற நோக்கத்தோடு அதிபர் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிட்ட இனப் படுகொலை நடந்ததாகவும் சர்வதேச நாடுகள் இலங்கை மீது பல்வேறு கட்டங்களில் அழுத்தம் கொடுத்து வருவது ராஜபக்சவுக்கு இந்த தேர்தலில் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.

ராணுவம் போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது தொடர்பாக இலங்கைக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகின்றன. இதனால் ராஜபக்சவுக்கு சர்வதேச அளவிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மைத்ரிபால சிறீசேனா ராஜபக்ச அமைச்சரவையில் இடம்பெற்றவர் ஆவார். இவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையிலிருந்து விலகினார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்ச மற்றும் மைத்ரிபால சிறீசேனா ஆகிய இருவருமே அங்கு பெரும்பான்மை வகிக்கும் சிங்கள புத்த மதத்தைச் சர்ந்தவர்களாக இருப்பதனால் அங்கு வாழும் சிறுபான்மையின தமிழர்களும் முஸ்லிம் மக்களும் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறீசேனாவுக்கு இலங்கை தமிழ் தேசிய கட்சிகளும், சமீக கால வன்முறைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் முஸ்லிம் கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. வடக்கு பகுதிகளில் ராணுவ அதிகாரம் நீடித்திருப்பதை எதிர்த்து அதனை திரும்ப பெற வேண்டும் என்பதே இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

வவுனியாவில் தமிழர்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற ராஜபக்ச அந்த மக்களிடம் 'தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேலானது' என்றார். ராஜபக்சவின் இந்த பிரச்சாரத்தை சர்வாதிகாரத்தனம் மற்றும் தவறான கொள்கை என்றும் எதிர்கட்சிகள் விமர்சித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x