

இலங்கையில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 17 பேர் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேட்சைகள். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறீசேனாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 15,044,490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக நாடு முழுவதும் 12,021 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். சுமார் 71,000 போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தேர்தலைக் கண்காணிக்க சார்க் நாடுகள் உட்பட 55 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் இலங் கையில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த 2010 தேர்தல் பிரச்சாரத்தைவிட தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தேர்தல் தொடர்பாக இது வரை 740-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.