

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவைப் போலவே புதிய அதிபர் சிறிசேனாவும் சீனாவுக்கு ஆதரவான கொள்கைகளை கடைப்பிடிப்பார் என அந்த நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிசேனாவுக்கு வாழ்த்துகள். இலங்கை அரசையும் அந்நாட்டு மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு அவர் அழைத்துச் செல்வார் என்று நம்புகிறோம்.
கடந்த காலங்களில் சீனா-இலங்கை இடையிலான உறவு குறிப்பிடத்தக்க வகையில் மேம்பாடு அடைந்தது. குறிப்பாக சமத்துவம், இருதரப்பு நம்பிக்கை மற்றும் இருதரப்புக்கும் பலன் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகினறன.
இலங்கையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசும் சீன அரசுடன் தொடர்ந்து உறவை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான கொள்கைகளை வகுத்து, திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம்.
சீனாவின் கனவு திட்டமான கடல் துறை பட்டு சாலை திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், முதல் நாடாக இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்கும் புதிய அரசு ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தியா, சீனாவுடன் சம அளவில் உறவு வைத்துக்கொள்ளப்படும் என்றும் சீனா நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் வெளிப்படைத் தன்மை குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் சிறிசேனா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், புதிய பட்டு சாலை மற்றும் புதிய கடல் துறை பட்டு சாலை திட்டங்களுக்கு 4,000 கோடி டாலர்களை ஒதுக்கி உள்ளார். இதற்கு இலங்கை, மாலத்தீவுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய பெருங்கடல் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைய இந்த திட்டம் வழிவகுத்துவிடும் என்ற அச்சம் காரணமாக, இந்தியா இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.