Published : 27 Jan 2015 11:11 AM
Last Updated : 27 Jan 2015 11:11 AM

உலக மசாலா: பாம்பான மனிதன்!

இத்தாலிய கலைஞர் கிடோ டேனியல் அபூர்வமானவர். மனிதக் கைகளில் விலங்குகளின் உருவங்களை அப்படியே கொண்டு வருவதில் நிபுணர். 40 ஆண்டுகளாக ஓவியராக இருந்து வந்த கிடோ, மனித உடல் மீது வரையும் ஆற்றலை 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுகொண்டார்.

விலங்குகள், பறவைகள், பூக்கள், கட்டிடங்கள், கார்கள் என்று பலவற்றையும் கைகளில் வரைந்து, விதவிதமாகப் புகைப்படங்கள் எடுக்கிறார். இந்தப் புகைப்படங்களில் போட்டோஷாப் வேலைகளைச் செய்யாமல், தன்னுடைய ஓவியத் திறமையை மட்டும் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார். இவருடைய ஓவியங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது.



கலக்குங்க கிடோ!

ஜிம்பி ஜிம்பி என்ற தாவரம் பார்க்க மிகவும் சாதுவாகத் தெரிகிறது. ஆனால் உலகிலேயே மிக அதிக விஷம் கொண்ட தாவரமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற இடங்களில் உள்ள மழைக்காடுகளில் இவை வாழ்கின்றன. இரண்டு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்தச் செடி, நாய், குதிரை, மனிதர்களைக் கூட கொல்லக்கூடிய சக்தி படைத்தது.

இந்தச் செடியின் இலைகள் உடல் மீது பட்டால் காயத்தை ஏற்படுத்தி, விஷத்தைச் செலுத்திவிடுகின்றன. உடனே மருத்துவம் பார்த்தால் கூட மீண்டு வர பல மாதங்களாகும். நூறாண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட காய்ந்த இலையைத் தொட்டால் கூட வலியை உணர முடியும். இந்தச் செடியின் வேர்களைத் தவிர இலைகள், தண்டு, காய், பழங்கள் அனைத்திலும் காயத்தை ஏற்படுத்தக்கூடிய மென்மையான முட்கள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. விஷம் உமிழும் இந்தத் தாவரத்தை, ’தாவர ஆயுதம்’ என்று அழைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தாவர ஆயுதம்... சரியான பெயர்தான்!



சீனாவில் வசிக்கும் லீ, லாட்டரி டிக்கெட் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த பத்தாண்டுகளாக லாட்டரிக்காக அதிகம் செலவு செய்து வருகிறார். இதனால் லீயின் மனைவியும் மகளும் அவர் மீது வருத்தத்தில் இருக்கின்றனர். சென்ற வாரம் லாட்டரி மூலம் லீக்கு 4.9 கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்திருக்கிறது. பரிசுத் தொகையை யாருக்கும் வெளியே சொல்ல விருப்பமில்லை… குறிப்பாகத் தன் மனைவி, மகளிடம் சொல்ல விருப்பமில்லை.

அதனால் முகத்தை ஒரு துணியால் மறைத்துக்கொண்டு, பரிசைப் பெற்றிருக்கிறார் லீ. ‘லாட்டரி பணம் அவர்களுக்குப் பிடிக்காது. அதனால் அவர்களிடம் சொல்லப் போவதில்லை. இந்தப் பணத்தை வைத்து நான் சொந்தமாக வியாபாரம் செய்யப் போகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என் குடும்பத்தின் நிலையையும் உயர்த்தி விடுவேன்’ என்கிறார் லீ. ஸ்பைடர்மேன், பாண்டா ஆடைகளை அணிந்து, முகத்தைப் பிறருக்குக் காட்டாமல் லாட்டரி பணத்தை வாங்கிச் செல்பவர்கள் சீனாவில் அதிகரித்து வருகிறார்கள்.

எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்க!



பிரிட்டனில் வசிக்கும் 26 வயது அலெக்ஸ் நோபெலுக்குப் பேய், பிசாசு கதைகளும் திரைப்படங்களும் மிகவும் பிடிக்கும். ரத்தக்காட்டேரியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அலெக்ஸுக்கு வந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் சம்மதம் சொன்னார். தொடர்ந்து அதே பாத்திரத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.

தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, முழுநேர ரத்தக்காட்டேரியாக வலம் வருகிறார். தினமும் ஒரேவிதமான மேக்-அப்தான். கண்களில் கோரம், வாயிலும் கைகளிலும் சிவப்பு வண்ணம் பூசிவிட்டால் என்னைக் கண்டு யாரும் பயந்து நடுங்குவார்கள் என்கிற அலெக்ஸ், எத்தனை முறை நடித்தாலும் கொஞ்சம் கூட சலிப்பு வரவில்லை என்கிறார்.

பார்க்கிறவங்களுக்குச் சலிப்பு வர்றதுக்குள்ளே வேற பாத்திரங்களில் நடிக்க ஆரம்பிச்சிருங்க அலெக்ஸ்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x