உலக மசாலா: ராம்போ ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!

உலக மசாலா: ராம்போ ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!
Updated on
2 min read

புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். 58 வயது மார்டினா 42 வயது ஜுலியா லெமிகோவாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரஷ்யாவில் பிறந்த ஜுலியா, பிரான்ஸில் அழகு சாதனங்கள் வியாபாரம் செய்து வருகிறார். மார்டினாவுக்கும் ஜுலியாவுக்கும் நீண்ட கால நட்பு இருந்தது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த ஆறரை வருடங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். சமபாலினத்தவர் திருமணம் செய்துகொள்வது அமெரிக்காவில் சில மாகாணங்களில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே இருவரும் தங்கள் திருமணத்தை வெளிப்படையாக நடத்தி, உலகத்துக்கு அறிவித்துவிட்டனர். 13 வயது விக்டோரியா, 8 வயது எம்மா இருவரும் ஜுலியாவின் குழந்தைகள். இந்தக் குழந்தைகளை மார்டினா தத்தெடுத்துக்கொள்ள இருக்கிறார். ‘எல்லா காதல்களைப் போலவும்தான் எங்களுடையதும். என்னுடைய கஷ்டம், துக்கம், வேதனையின்போது ஆதரவாக இருந்து என்னை மீட்டெடுத்திருக்கிறார். அன்பே உருவானவராக இருக்கிறார் மார்டினா. இதற்கு மேல் வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்! மற்றவர்களைப் போலவே எங்கள் வாழ்க்கையும் மிக இயல்பாகவும் அழகாகவும் போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார் ஜுலியா. மார்டினா - ஜுலியா ஜோடி அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

புது மண ஜோடிக்கு வாழ்த்துகள்!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் வசிக்கும் மின் டெயு என்ற 81 வயது பெண் ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்திருக்கிறார். 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோதும் மின் கொஞ்சமும் பயம் கொள்ளவில்லை. ஸ்கைடைவிங் செய்ய வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அது தற்போது நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி என்கிறார் மின். ஏற்கெனவே ஐடா மெடெஸ் என்ற 103 வயது பிரேஸில் பெண் ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை நிகழ்த்திவிட்டதால், மின்னுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் ஆசியாவின் வயதான பெண் ஸ்கைடைவர் என்ற பட்டம் மின்னுக்குக் கிடைத்திருக்கிறது. ‘என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது. சாதனையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை’ என்கிறார் மின்.

சாதனைக்கு வயது தடையில்லை!

ஹம்ப்பேக் திமிங்கிலம் ‘டிக் டாக்’ என்ற ஓசையை எழுப்பிக்கொண்டிருக்கும். அதற்கான காரணத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நள்ளிரவில் கடலின் ஆழத்தில் மீன் கூட்டங்கள், ஈல்களைக் கண்டவுடன் ‘டிக் டாக்’ என்று ஒலியை எழுப்பி அருகில் உள்ள திமிங்கிலங்களைச் சாப்பிட அழைக்கிறது. ஆனால் வேட்டையாடும்போது எந்த ஒலியையும் எழுப்பாமல் அமைதியாகவும் தனித்தனியாகவும் வேட்டையாடுகின்றன இந்த ஹம்பேக் திமிங்கிலங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பகிர்ந்து உண்ணும் பழக்கம் திமிங்கிலத்துக்கும் இருக்கு!

ராம்போவாக நடித்த சில்வெஸ்டர் ஸ்டாலோனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே நான்கு ராம்போ படங்களில் நடித்த சில்வெஸ்டர் ஸ்டாலோன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஐந்தாவதாக ஒரு ராம்போ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லாஸ்ட் பிளட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் 68 வயது ஸ்டாலோன் கதாநாயகன். 2016-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளிவர இருக்கிறது.

ராம்போ ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in