நேபாள வெள்ளத்தில் கரை ஒதுங்கிய வங்கிப் பணப்பெட்டியை உடைத்து ரூ.92.68 லட்சம் திருடிய 29 பேர் கைது

வங்கிப் பணப்பெட்டியை உடைத்து திருடப்பட்ட ரூ.92.68 லட்சம்

வங்கிப் பணப்பெட்டியை உடைத்து திருடப்பட்ட ரூ.92.68 லட்சம்

Updated on
1 min read

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய வங்கிப் பணப்பெட்டியை உடைத்து சுமார் ரூ.92.68 லட்சம் பணத்தைக்கொள்ளை அடித்த 29 பேரைப்போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள போலீஸார் எச்சரித்துள்ளனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் போடே கோசி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், நீர்மின் திட்டங்கள் சேதம் அடைந்துள்ளன. சேறும் சகதியுமாக வெள்ளம் ஏற்பட்டதால் மீட்புப் பணிகளில் சிக்கல் எழுந்துள்ளது. பெருவெள்ளத்தில் பலருடைய உடல்கள் அடித்துச் செல்லப்பட்டன. பலருடைய உடல்கள் சேறு சகதிகளுக்கு அடியில் சிக்கியுள்ளன. அந்த உடல்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத் தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாள பெரு வெள்ளத்தில் வங்கிப் பணப்பெட்டி ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.

இது தாதிங் மாவட்டம் கல்சி கிராமப் பஞ்சாயத்து 4-ல் உள்ள பேல்குகோலா அருகே திரிசூலி நதிக்கரையில் ஒதுங்கியது. அங்கிருந்த உள்ளூர் மக்கள் பணப்பெட்டியைப் பார்த்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்காமல் தூக்கிச் சென்றனர்.

பின்னர் அந்தப் பணப்பெட்டியைப் பலர் சேர்ந்து உடைத்துள்ளனர். அதில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக ஆகஸ்ட் 28-ம் தேதி போலீஸுக்குச் சிலர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தாதிங் போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை யைத் தொடங்கினர்.

விசாரணையின் ஆரம்பக் கட்டத்திலேயே 29 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் ரூ.92.68 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கல்சி-4 பகுதியில் உள்ள மாஸ்டார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் கல்சி-6 அடம்காட் மற்றும் சித்தலேக்-7 அடம்தார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் சித்வான் மற்றும் பர்சா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தற்போது தாதிங்கில் வசித்து வருபவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, நாராயணி நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை 2 பேர் திருடினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலானது. குற்றம் சாட்டப்பட்ட அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள போலீஸார் எச்சரித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>வங்கிப் பணப்பெட்டியை உடைத்து திருடப்பட்ட ரூ.92.68 லட்சம்</p></div>
பெருவெள்ளமும் பாதிப்பும்: நேபாளம் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in