Published : 11 Jan 2015 12:47 PM
Last Updated : 11 Jan 2015 12:47 PM

உலக மசாலா: அடுத்து குழந்தை பிறந்த உடனேயே ஸ்பாக்களில் விடணும்னு சொல்வாங்க போல...

சீனாவில் உள்ள லெஹெ லெடு உயிரியியல் பூங்காவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற முடியும். உயிரியியல் பூங்காக்களில் பொதுவாக விலங்குகள் கூண்டுகளில் இருக்கும். மனிதர்கள் சுதந்திரமாகச் சுற்றிப் பார்ப்பார்கள். ஆனால் இங்கே விலங்குகள் சுதந்திரமாக உலாவி வருகின்றன. மனிதர்கள் வாகனத்தில் உள்ள கூண்டுகளில் பயணம் செய்து, சுற்றிப் பார்க்கிறார்கள். புலிகளையும் சிங்கங்களையும் அருகில் பார்ப்பதற்காக, வாகனத்தில் மாமிசத் துண்டுகளைக் கட்டி வைக்கிறார்கள். இரைக்காக புலிகளும் சிங்கங்களும் உறுமிக்கொண்டு அருகில் வருகின்றன. கூண்டுக்குள் இருக்கும் மனிதர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவம் கிடைக்கிறது. இந்த ஒரு காரணத்துக்காகவே பூங்கா மிகவும் புகழ்பெற்றுவிட்டது. மூன்று மாதங்களுக்கு உரிய டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. புலிகளும் சிங்கங்களும் பசியுடன் அலைவதால் மனிதர்கள் விரல்களை கம்பிகளில் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.

கம்பீரமான விலங்குகளை இப்படி வண்டி பின்னாடி அலைய விடறது கொஞ்சம் கூட நல்லா இல்லை…

செல்லப் பிராணிகளுக்கான உணவுகளைப் பரிசோதித்து, சுவைத்துப் பார்ப்பது ஐரோப்பாவில் மிக முக்கியமான பணியாக மாறி வருகிறது. நாய், பூனை உணவுகளை முகர்ந்து பார்த்து, சுவைத்துப் பார்த்து தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக தொழில்முறை மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். கூடுதல் அனுபவம் உள்ளவர்களுக்கு 23 லட்சம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கிறது. ‘நாய் உணவைச் சுவைத்துப் பார்ப்பதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை. இது என் தொழில். வாய் இல்லா பிராணிகளுக்குச் செய்யும் சேவை என்பதால் இந்தப் பணியில் எனக்கு மன நிறைவு கிடைக்கிறது’ என்கிறார் இந்த வேலையைச் செய்து வரும் பிலிப் வெல்ஸ்.

இந்த வேலைக்கு எவ்வளவு வேணும்னாலும் சம்பளம் கொடுக்கலாம்…

அழகு சாதனங்கள் தொழில் உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அழகையும் ஆரோக்கியத்தையும் இணைத்து ஸ்பா என்ற பெயரில் வருமானத்தை வாரிக் குவித்து வருகிறார்கள். பெரியவர்களைக் குறிவைத்து இயங்கி வந்த இந்தத் தொழில், இப்போது குழந்தைகளை நோக்கித் திரும்பியிருக்கிறது. 7 வயதிலிருந்து 13 வயது வரை குழந்தைகளுக்கான ஸ்பாக்கள் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் ஸ்பாக்களில் மெனிக்யூர், பெடிக்யூர், மேக்அப் என்று இன்னும் பல விஷயங்களை விரும்பி செய்து கொள்கிறார்கள். அங்குள்ள 20 சதவீத ஸ்பாக்கள் குழந்தைகளுக்காகவே இயங்கி வருகின்றன. குழந்தைகளும் பெற்றோர்களும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து வருவதாகக் கூறுகிறார்கள்.

அடுத்து குழந்தை பிறந்த உடனேயே ஸ்பாக்களில் விடணும்னு சொல்வாங்க போல…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x