

பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்வமில்லை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஆப்கான் மண்ணை இந்தியா பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் டான் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சர்தாஜ் அஜீஸ் அளித்தப் பேட்டியின்போது, "இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் இந்தியா - பாகிஸ்தான் உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்வமில்லை. இருநாட்டு நல்லுறவை பேணுவதில் இந்தியா ஒத்துழையாமை நிலையையே கடைபிடிக்கிறது.
இந்தியாவின் முந்தைய அரசு (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) இவ்விவகாரத்தில் சற்று தந்திரமான போக்கை கடைப்பிடித்தது.
ஆனால் மோடி தலைமையிலான அரசு இதில் மாறுபடுகிறது. இரு நாட்டு உறவிலும் சுமுகத் தன்மை நிலவ வேண்டுமென்றால், நாங்கள் காஷ்மீர் விவகாரத்தில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தாக்குதல் நடத்திக்கொள்ள போவதில்லை என்று முடிவு செய்துவிட்டது. நாங்கள் எங்களது மண்ணை பிற நாட்டின் மீது தாக்குதல் நடத்த உபயோகப்படுத்தப்போவதில்லை என்றும் தீர்மானித்துவிட்டோம். ஆனால் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஆப்கான் மண்ணை இந்தியா பயன்படுத்துகிறது.
இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது. ஆனால் தங்களது சொந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே பேச்சுவார்த்தை தேவை என்கிறது. அந்த விதிமுறைகள் அனைத்தும் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உள்ளது" இவ்வாறு பகிரங்க குற்றச்சாட்டுகளை சர்தாஸ் முன்வைத்தார்.