

கத்தோலிக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் குழந்தைப் பேறு விஷயத்தில் முயல் போல் இருக்காமல், பொறுப்பான பெற்றோர்களாக நடந்துகொள்வது அவசியம் என்று போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆசிய பயணமாக இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் திரும்பும்போது விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, "குழந்தைப் பேறு அடைவதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தேவாலயம் வகுத்துள்ளது. அதனைத் தாண்டி வேறு நிறுவனங்கள் குடும்ப அளவினை தீர்மானிக்க நினைக்கக் கூடாது.
ஆப்பிரிக்க பாதிரியார்கள் இது தொடர்பான கவலையை என்னிடம் தெரிவித்துள்ளனர். முற்போக்குச் சிந்தனைகள் என்ற பெயரில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் தன் பாலின உறவாளர் உரிமைகள் என்ற வகையில் பலதரப்பட்ட மேற்கத்திய கருத்துக்கள் பல்வேறு நாடுகளில் திணிக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் எப்போதும் வளர்ச்சிக்கான அடிப்படை நிபந்தனைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் தங்களது விருப்பங்களின் அடிப்படையில் வாழ உரிமையுண்டு, தனி நபர்கள் இதுபோன்ற கொள்கைகளுக்கு உடன்படக் கூடாது.
முயல்கள் குட்டிகளை ஈனுவதைப் போல் அல்லாமல், கத்தோலிக்கர்கள் பொறுப்பான பெற்றோர்களாக இருக்க வேண்டியது அவசியம்" என்றார் அவர்.
செயற்கைக் கருத்தடை முறைகளுக்கு சமீபத்தில் கத்தோலிக்க தேவாலயம் தடை விதித்ததைத் தொடர்ந்து, போப் ஆண்டவர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், கத்தோலிக்க தேவாலயம் விதித்த தடை பெரும்பாலானவர்களால் அலட்சியமாகவும், ஊடகங்களில் கவனிப்பு ஏற்படுத்தாத வகையிலும் அமைந்திருப்பதாக சொல்லப்படுவதும் இங்கே கவனிக்கத்தக்கது.