

போஸ், மீனவர் பிரதிநிதி (ராமேசுவரம்):
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுதலை செய்வதுடன் தடைபட்டு நின்று போயிருக்கும் இரு நாட்டு மீனவப் பேச்சு வார்த்தையை நடத்தி தமிழக-இலங்கை மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையும், வாழ்வாதாரத்தையும் புதிய அதிபர் பாதுகாத்திட வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, மீனவர் பிரதிநிதி, (தங்கச்சிமடம்):
இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு பாதுகாப்பு காரணங்களால் 1983-ம் ஆண்டு ராமேசுவரம்-தலைமன்னார் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிற சூழலில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க வேண்டும்.
சசிகரன் (35) மண்டபம் அகதிகள் முகாம்
வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை அதிபர் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் அவர்களிடமே வழங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்கள் இலங்கை திரும்ப வாய்ப்புள்ளது.
மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்
மைத்ரிபால ஆட்சி என்பது ஒரு விடுதலை என்றோ, ஒரு மீட்சி என்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதை தாய் நாட்டிலும் (இந்தியா), புலம் பெயர்ந்தும் வாழும் என் உடன் பிறப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
எம்.ரிஷான் ஷெரீப், எழுத்தாளர், இலங்கை
மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகளே பிரதான காரணமாக அமைந்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு அவர் நன்றியுடையவராக இருக்க வேண்டும்.
கணன் சுவாமி, டொரண்டோ
வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு தொழில் தொடங்கும் சலுகைகளும், தமிழ் முஸ்லிம் மக்களின் முதலீடுகளுக்கு முன்னுரிமையும் சலுகையும் அளிக்க வேண்டும். மேலும் இரட்டை குடியுரிமை போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்த புதிய அதிபர் முன்வர வேண்டும்.
ஷர்மிளா செய்யித், பெண் விழிப்புணர்வு செயற்பாட்டாளர், இலங்கை
இதுவொரு புரட்சிகரமான ஆரம்பம், சர்வாதிகாரத்துக்கு சாவுமணி, குடும்ப அரசியலுக்கு சவுக்கடி, இனவாத அரசியலுக்கு சரியான பாடம் என்றெல்லாம் பெருமைகொள்ள நிச்சயமாக ஒன்றுமேயில்லை. சிறுபான்மை மக்களாகிய எமது அரசியல் நிலையானது ஏதேனுமொரு சாக்கில், ஏதேனுமொரு நம்பிக்கையில், ஏதேனுமொரு காரணத்தைக் கொண்டு சிங்களப் பேரினவாதத்திடம்தான் சரணாகதியடைவதாக உள்ளது. இந்த சாபக்கேட்டில் மகிந்தவின் தோல்வியும் மைத்திரியின் வெற்றியும் நமக்கு ஒன்றுதான்!
செல்வரத்தினம், மேல்மொணவூர் அகதிகள் முகாம் தலைவர்
சிறிசேனா தமிழர்களுக்கு நல்லது செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இறுதிப்போரில் தமிழர்களை கொன்று குவித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக ராஜபக்சவுக்கு எதிராக தமிழர்கள் வாக்களித்துள்ளனர். இலங்கையில் நல்லது நடந்தால் சரி. 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தங்கியுள்ள பெரும்பாலான அகதிகள் தாயகம் திரும்ப விரும்பவில்லை. அங்கு சென்றாலும் விவசாய வேலைதான் செய்ய வேண்டும். இல்லை என்றால் கொழும்பு போன்ற பெரிய நகரங்களுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டும். இங்கிருந்தால் ஏதாவது கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்வோம்.
ரஞ்சினி, திருவண்ணாமலை அகதிகள் முகாம்
தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, வவுனியா, கிளிநொச்சி போன்ற அனைத்து இடங்களிலும் சிறிசேனாவுக்கு அதிக வாக்கு கிடைத்துள்ளது. 25 ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் தாய் நாட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு உள்ளது.