

கடந்தவாரம் பாரீஸில் சார்லி ஹெப்டோ பத்ரிகை அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக நடத்தப்பட்ட பேரணியை தான் வரவேற்பதாகவும் இந்த உலகில் தீவிரவாதம் எங்கு தலைதூக்கினாலும் அதற்கெதிரான எதிர்ப்பை பதிவுசெய்தாக வேண்டும் என்றும் ஐ,நா,வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
பாரீசில் பத்திரிகை அலுவலகத்திலும், கொஷார் சூப்பர்மார்க்கெட்டிலும் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அங்கு கொல்லப்பட்ட ஒரு போலீஸ்காரர் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்து பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் பேரணி ஊர்வலம் நடைபெற்றது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இப்பேரணியில் பொதுமக்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இப்பேரணியில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் சார்பாக தனது சிறப்புத் தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்தூராவை அனுப்பிவைத்திருந்தார். அவர் வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"இது தீவிரவாதத்தின்மீது உலக அமைப்புகள் தங்கள் வெறுப்பைக் காட்டும் பேரணி. கடந்த சில நாட்களாகவே உலக ஒற்றுமையை வெளிப்படுத்தும் இத்தகைய பேரணிக் காட்சிகளைக் கண்டு நான் மிகவும் மனம் உருகினேன்.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துதல், தீவிரவாதத்திற்கு பதிலடிக் கொடுத்தல் ஆகிய மிகமுக்கியப் பணிகளை ஏற்று செயல்படுத்தும் மேலான பொறுப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது.
சகிப்புத்தன்மையையும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளலை வளர்த்தெடுக்கும் உச்சபட்ச முயற்சிகளுக்காக நான் உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வன்முறை மற்றும் பிரிவினைப் பாதைகளுக்கான பிரச்சினைகளை மேலும் மேலும் அதிகமாக்காமல் சட்டவிதிகளையும் மனித உரிமைகளையும் அனைவரும் மதித்து நடந்துகொள்ள வேண்டும். பிரான்ஸில் நடைபெற்ற இந்தத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லீம்களை குறிவைத்து பதிலடிகள் கொடுக்க முற்படுவதும் கண்டனத்திற்குரியது. தேவையற்ற இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் கைப்பாவையாக நாம் செயல்பட நேரிடுவதற்கும் திரும்பத் திரும்ப வன்முறைச் சுழலிலேயே நாம் சிக்குவதற்கும் மட்டுமே ஏதுவாகும்" என்றார்.