

ராணுவ பிடியில் இருந்து தமிழர் பகுதி விடுபட வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹியுகோ ஸ்வைர் நேற்று இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியை பார்வையிட்டார். அங்கு முதல்வர் விக்னேஸ்வரனை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு விக்னேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் புதிய அரசின் செயல்பாடுகள் இதுவரை நன்றாகவே உள்ளன. குறிப்பாக ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோர் மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும் தமிழர் பகுதியில் தொடர்ந்து ராணுவம் முகாமிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ராணுவ படைகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து பிரிட்டிஷ் அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். மேலும் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் போர்க்குற்ற விசாரணைகள் குறித்தும் பிரிட்டிஷ் அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.