

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். எனினும், அவர் என்ன விதமான உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
இவரின் மறைவைத் தொடர்ந்து இவரின் சகோதரர் சல்மான் (79) புதிய மன்னராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் ரியாத் ஆளுநராக வும், பாதுகாப்புத் துறை அமைச் சராகவும் செயல்பட்டவர் ஆவார்.
அப்துல்லாவின் மற்றொரு சகோதரரான மொக்ரென், புதிய இளவரசராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு மன்னராக முடிசூட்டிக் கொண்ட அப்துல்லா, அமெரிக்காவுடன் நல்ல நட்பைத் தொடர்ந்து வந்தார். அதன் காரணமாக, ஐ.எஸ்.அமைப்பை எதிர்த்துச் செயல்பட மிகச் சமீபத்தில் அமெரிக்காவுடன் இணைந்து சவுதி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது குறிப் பிடத்தக்கது.
தவிர, முஸ்லிம் ப்ரதர்ஹுட் அமைப்பின் முகமது மோர்சியை எகிப்து ஆட்சியில் இருந்து கீழே இறக்கப்பட்டது முதல், அங்கு புதி தாகப் பதவியேற்ற அப்துல் பத்தே அல் சிசிக்கு தொடக்கம் முதலே அப்துல்லா ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இவரின் இறப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்துல் பத்தே அல் சிசி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.