Published : 21 Jan 2015 11:15 AM
Last Updated : 21 Jan 2015 11:15 AM

உலக மசாலா: இன்ஸ்டாகிராம் பிரபலம் ஸ்கெல்லி (எலும்புக்கூடு!)

இன்ஸ்டாகிராமில் மிக முக்கியமான பிரபலமாக வலம் வருகிறார் ஸ்கெல்லி. இவரது விதவிதமான, அழகான புகைப்படங்களுக்காக ஒன்றரை லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த ஸ்கெல்லி ஓர் எலும்புக்கூடு! டொரண்டோவில் வசிக்கும் டானாவின் அலுவலகத்துக்கு பிளாஸ்டிக் எலும்புக்கூடு வந்தது. எலும்புக்கூட்டுடன் தன்னை வைத்துப் புகைப்படம் எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் டானா.

எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. எலும்புக்கூடுக்கு ஸ்கெல்லி என்று பெயரிட்டு, விதவிதமாக அலங்காரம் செய்து, புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார் டானா. மேக் அப் செய்துகொள்வது, உணவகத்தில் சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் நீந்துவது, கிடார் வாசிப்பது, படுக்கையில் செல்போனுடன் படுத்திருப்பது, பார்லரில் ஃபேஷியல் செய்துகொள்வது என்று ஸ்கெல்லியின் ஒவ்வொரு கெட்டப்பும் பிரமாதம்.

புகைப்படங்கள், பீங்கான் குவளைகள், வாழ்த்து அட்டைகள், டிசர்ட்கள் போன்றவற்றில் ஸ்கெல்லியின் புகைப்படங்களைப் போட்டு விற்பனையும் செய்து வருகிறார் டானா.

விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம் வருமானம் தரும் அளவுக்கு வந்திருக்கு!

ஸ்பெயின், மெக்ஸிகோ நாடுகளில் மாடுகளை வைத்துச் சண்டையிடும் விளையாட்டு மிகவும் பிரபலம். விளையாட்டின் முடிவில் மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் மாட்டுச் சண்டை வித்தியாசமானது.

இங்கே மனிதர்கள் மாடுகளுக்கு ஒரு சிறு காயத்தைக்கூட ஏற்படுத்தக்கூடாது. ஆனால் மாடுகள் மனிதர்களைக் காயப்படுத்தலாம், உயிரைப் பறிக்கலாம். கோஸ்டா ரிகாவில் ஆயிரக்கணக்கான் குடும்பங்கள் மாட்டுப் பண்ணைகளை வைத்துப் பிழைத்து வருகின்றன. மாடுகளை மிக உயர்வாக மதிக்கின்றனர். மாட்டுச் சண்டை என்பது பாரம்பரியமாக நடத்தப்படும் கலாசார நிகழ்வு என்பதால் விழாவுக்குத் தடை ஏதுமில்லை. அதேவேளையில் மாடுகளுக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.

இங்கே எல்லாம் ஜல்லிக்கட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேங்கிது…

சீனாவில் வசிக்கிறார்கள் ஸியாவோ-வாங் தம்பதி. அவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இப்போது மீண்டும் ஒரு குழந்தைக்குத் தாயானார் ஸியாவோ. நீண்ட இடைவேளைக்குப் பிறகு உருவான குழந்தையை நினைத்து தம்பதிக்கு சந்தோஷம். ஆனால் முதல் குழந்தைக்கு இதில் விருப்பமே இல்லை.

இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தவள், திடீரென்று குழந்தை பிறந்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றாள். விளையாட்டுக்காகச் சொல்கிறாள் என்று நினைத்து, அவளைச் சமாதானம் செய்ய முயன்றார்கள். ஆனால் அவள் தீவிரமாகத் தன் எதிர்ப்பைக் காட்டியதோடு, மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்றும் மிரட்டினாள்.

பெற்றோர் இருவரும் எவ்வளவோ புரிய வைக்க முயன்றும் பலன் இல்லை. அவள் அறையில் ஒரு கத்தியைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார்கள். வேறு வழியின்றி கருவைக் கலைத்துவிட்டனர். ‘பிறக்க இருக்கும் குழந்தைக்காக எங்கள் வீட்டுத் தேவதையை இழக்கத் தயாராக இல்லை’ என்கிறார் ஸியாவோ.

ஐயோ… பாவம். சீனாவின் ஒரு குழந்தை திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பா இருக்குமோ?

லண்டனில் வசிக்கும் நீல் போர்டர் கிராஃபிக் டிசைனர். தினமும் தன்னுடைய அலுவலகத்துக்கு நீண்ட தூரம் பயணம் செய்கிறார். இரவில் சரியான நேரத்துக்கு ரயில்கள் வருவதில்லை என்பதால் தாமதமாக வீடு திரும்புகிறார்.

அப்போது 6 வயது மகள் எல்லா போர்டர் தூங்கி இருப்பாள். மீண்டும் அதிகாலையில் கிளம்பிவிடுவார். எல்லாவுக்குத் தன் அப்பாவுடன் நேரம் செலவிட முடிவதில்லை என்று வருத்தம். திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

‘டியர் மிஸ்டர் ரயில்வே மேன்… உங்கள் ரயில்கள் சரியான நேரத்துக்கு வராததால், என் அப்பா மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருகிறார். அவருடன் நான் பேசவோ, விளையாடவோ முடிவதில்லை. அவர் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எனக்குத்தான் என்கிறார். ஆனால் அவருக்கு நேரம் கிடைக்காததால் அந்தப் பணத்தை வைத்து என்னால் டிஸ்னிலேண்டுக்குக்கூடப் போக முடியவில்லை. சரியான நேரத்துக்கு ரயில்களை இயக்குங்கள்’ என்று கடிதம் எழுதிவிட்டாள். ரயில்வே நிர்வாகம் மன்னிப்புக் கேட்டு, எல்லா போர்டருக்குப் பதில் அனுப்பியிருக்கிறது.

வெல்டன் எல்லா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x