

இலங்கை அதிபர் தேர்தலில் சக்திவாய்ந்த அதிபர் ராஜபக்சவைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றுள்ளார் சிறிசேனா. அவரது வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள அண்டை நாடான இலங்கையில் வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 1945-ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடந்த தேர்தலில் அப்போதைய சக்தி வாய்ந்த பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தோல்வி அடைந்தார். ‘பல ஆண்டுகளாகப் போரை துணிச்சலுடன் சந்தித்த பிரிட்டன் மக்கள், இப்போது புதிய யுகத்தையும் அதே துணிச்சலுடன் சந்திக்கின்றனர்’ என்று சர்ச்சில் கூறினார். அவருக்கு எதிராக விழுந்த ஓட்டுகள் அதைத்தான் பிரதிபலிக்கின்றன என்றார். அதே துணிச்சலைதான் இலங்கை மக்களும் இந்த தேர்தலில் வெளிப்படுத்தி உள்ளனர்.
அந்தத் துணிச்சல்தான் அதிபர் ராஜபக்சவின் தோல்வியை உறுதி செய்துள்ளது. ‘எங்கள் ஓட்டுகளை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்பதையும் இலங்கை மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனாவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அண்டை நாடான இலங்கையுடன் புதிய நல்லுறவை மேம்படுத்த அவருக்கு அழைப்பும் விடுத்துள்ளார். ஆனால், இந்த வெற்றி எதைக் காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும்.
முதலில் இலங்கையில் நடந்த தேர்தல் இரண்டு எதிர் எதிர் கட்சிகளுக்கு இடையில் நடந்தது அல்ல. இலங்கையில் ராஜபக்சவுக்கு செல்வாக்கு அதிகம். விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டவர். தீவு நாடான இலங்கையில் ராணுவ பலத்துடன், பிரபலமான புள்ளி என்ற பிம்பத்துடன், குடும்ப அரசியலுடன் அதிபராகத் திகழ்ந்தவர் ராஜபக்ச. இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் ராஜபக்ச அரசில் அமைச்சராக இருந்த சிறிசேனா. எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர். எனினும் பல ஆண்டுகளாக ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்.
இரண்டாவதாக இந்த தேர்தலில் சிறிசேனாவின் வெற்றி என்பதைவிட ராஜபக்சவை மக்கள் வெறுத்து ஒதுக்கி உள்ளனர் என்பதைதான் அதிகம் காட்டுகிறது. அதிபராக விடுதலைப் புலிகளை ஒடுக்கியது ராஜபக்சவின் சாதனையாக இருந்தால், தேர்தல் தோல்வி அவருக்கு மிகப்பெரிய சரிவு. ஆனால், விடுதலைப் புலிகளை ஒடுக்கும் விஷயத்தில் ராஜபக்சவுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களுக்கும் ராணுவத்துக்கும் கருத்தொற்றுமை இல்லை.
அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள், அரசியல் எதிர்ப்புகள் இருந்தன. அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டினார் ராஜபக்ச. சர்வாதிகாரம் கொண்ட அதிபராக தன்னை அமைத்துக் கொண்டார். அதன்மூலம் இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதன்பின் தான் விடுதலைப் புலிகளுடனான கடைசி கட்ட போரின் போது, பிரபாகரனுக்கு முடிவு கட்ட முடிந்தது. இதற்காக தனது ஒரு சகோதரரை (கோத்தபய ராஜபக்ச) பாதுகாப்புத் துறை செயலாளராக்கினார். மற்றொரு சகோதரரை (பசில் ராஜபக்ச) பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சராக்கினார்.
இன்னொரு சகோதரரை (சாமல் ராஜபக்ச) நாடாளுமன்ற சபாநாயகராக்கினார். மேலும் ராஜபக்சவின் மகன் நமல் அரசியல் வாரிசாக உருவெடுத்துள்ளார். இவர்கள் மூலம் அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அதனால்தான் புலிகளுடனான கடைசிக் கட்ட போரை தான் நினைத்தது போல் நடத்த முடிந்தது. ஆனால் குடும்ப அரசியலால்தான் அவரால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
மூன்றாவதாக, தமிழர்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் சிறிசேனாவுக்கு ஓட்டளித்துள்ளனர். இந்த நிலையில் தமிழர்கள், முஸ்லிம்களின் நம்பிக்கையை எத்தனை நாட்களுக்கு சிறிசேனா காப்பாற்ற நினைப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, அதிகாரப் பரவல் கொண்டு வரப்படுமா? தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வாரா?
இலங்கை போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜபக்ச முன்வரவில்லை. காணாமல் போன தமிழர்கள் பலரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக போருக்குப் பின்னர் தமிழர்களின் மறுவாழ்வுக்காக தான் அமைத்த எல்.எல்.ஆர்.சி என்ற குழு அளித்த பரிந்துரைகளை ராஜபக்ச நிறைவேற்றவில்லை.
ஆனால் வெற்றி பெற்ற சிறிசேனா, வடக்கு மாகாணத்தில் மீண்டும் ராணுவம் குவிக்கப்பட மாட்டாது என்று ஏற்கெனவே கூறியுள்ளார். மாங்க் கட்சி என்றழைக்கப்படும் ஜேஎச்யூ, வலதுசாரி ஜேவிபி ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற சிறிசேனாவுக்கு, அதிகாரப் பரவலாக்கத்துக்கு அனுமதி அளிக்க அவை பரிசீலிக்கலாம்.
அதேசமயம் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் சிறிசேனா. அதற்கு முன் கடந்த 1970-ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்தான் சிறிசேனா என்பதை மறந்து விடக்கூடாது.
எனவே இலங்கையில் பெரும்பான்மை அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்று நினைத்தால் தவறாக இருக்கும். அதற்குப் பதில் சில விஷயங்களில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி எனலாம். சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராஜபக்சவுக்கு அதிக ஆதரவு அளித்தார். சீனா பல ஒப்பந்தங்களை ராஜபக்ச அரசுடன் செய்து கொண்டது. தான் ஆட்சிக்கு வந்தால் அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறிசேனா வாக்குறுதி அளித்தார். அப்படி அவர் செய்தால், சீனாவுக்குப் பெரும் பின்னடைவுதான்.
எனினும், இலங்கை மேம்பாட்டு திட்டங்களில் இந்தியா பலனடையும் வகையில் சீனாவை ஒதுக்கி விடுவார்கள் என்று இப்போதைக்கு நினைக்க முடியாது. ஆனால், ‘இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சம அளவில் நல்லுறவு ஏற்படுத்துவேன்’ என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையில் புதிய அரசை ஏற்படுத்த மக்கள் காட்டிய ஒற்றுமை, நம்பிக்கை, துணிச்சலைபோல், புதிதாக அமையும் சிறிசேனா அரசுடன் நல்லுறவை நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள இந்திய அரசும் துணிச்சலுடன் களமிறங்க வேண்டும்.