

மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி லக்விக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
பயங்கரவாதி லக்விக்கு விதிப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், ஜாமீன் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது.
மேலும், இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வாதங்களை அவசரம் காட்டாமல் மீண்டும் விசாரித்து தகுதியான முடிவை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு வரும் ஜனவரி 12-ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருவதாக ஜியோ டி.வி. குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் அரசு விதித்த தடுப்புக் காவலை இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்புக் காவல் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ரூ.10 லட்சம் பிணைத் தொகையை லக்வி தரப்பினர் நீதிமன்றத்தில் செலுத்தியதை அடுத்து அவர் விடுவிக்கப்படவிருந்த நிலையில், ஆள் கடத்தல் வழக்கில் லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து ஜகியுர் லக்விக்கு பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி மீண்டும் ஜாமீன் வழங்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், லக்வியை தடுப்புக்காவலில் பாகிஸ்தான் அரசு அடைத்தது.
இருப்பினும், பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் நீட்டிப்பை எதிர்த்து ஜகியுர் லக்வியின் தரப்பு மேல்முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து, தடுப்புக்காவலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைக் கடுமையாக ஆட்சேபித்த இந்தியா, கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பசித்தை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததால், லக்வி சிறையிலிருந்து விடுவிக்கப்படும் முன்பு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை மீண்டும் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து பாகிஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியதாக லக்வி, அப்துல் வாஜித், முஷார் இக்பால், ஷாஹித் ஜமீல் அகமது மற்றும் யூனிஸ் அன்ஜும் ஆகியோர் குற்றம்சாட்டப்படடனர்.