

சீனாவில் புதிதாகக் கட்டப்பட்ட படகு வெள்ளோட்டத்தின்போது நதியில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த இந்தியர் உட்பட 22 பேர் நதியில் மூழ்கினர். மீட்புப் படையினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியான்ஸு மாகாணத்தில் யங்கட்ஸ் என்ற நதி ஓடுகிறது. சீனாவின் மிகப்பெரிய நதி இதுதான். புதிதாகக் கட்டப்பட்ட படகு ஒன்றை கடந்த வியாழக்கிழமை, இந்த நதியில் ஓடவிட்டு வெள்ளோட்டம் பார்த்தனர். அப்போது படகில் 25 பேர் இருந்துள்ளனர். சிறிது தூரம் சென்ற படகு திடீரென நதியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்கள் நதியில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து சீன தொலைக் காட்சி வெளியிட்ட செய்தியில், ‘நதியில் இருந்து 3 பேர் மீட்கப் பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. படகில் பயணம் செய்தவர்களில் 8 பேர் வெளிநாட்டினர்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நதியில் மூழ்கிய படகு சிங்கப்பூரை சேர்ந்த ஜேஎம்எஸ் டெல்டா என்று தெரிய வந்துள்ளது. படகில் சிங்கப்பூரைச் சேர்ந்த 4 பேர் சென்றுள்ளனர் என்று சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.
அதேபோல் இந்தியர் ஒருவரும் ஜப்பானியர் ஒருவரும் படகில் இருந்துள்ளனர். இத்தகவலை ஷாங்காயில் உள்ள இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். தவிர மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் படகில் இருந்துள்ளனர். படகு விபத்தில் இருந்து தப்பிய வாங் ஸெங்காய் என்பவர் மருத்துவமனையில் கூறுகையில், ‘படகு நதியில் புறப்பட்டவுடன் தண்ணீர் குபுகுபுவென உள்ளே புகுந்து விட்டது. 20 வினாடிகளில் படகு முழுவதும் தண்ணீர் நிரம்பி மூழ்கி விட்டது’ என்று தெரிவித்துள்ளார்.
‘படகை முழுவதும் கட்டி முடித்து, பல்வேறு நடைமுறை களை பூர்த்தி செய்தபின்தான் வெள்ளோட்டத்துக்கு விட்டிருக்க வேண்டும். அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெறா மலேயே வெள்ளோட்டம் பார்த்துள் ளனர்’’ என்று பாதுகாப்புத் துறை நிர்வாக அதிகாரி வாங் என்பவர் கூறியுள்ளார். நதியில் மூழ்கி காணாமல் போன 22 பேரை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.