

ஆக்ஸ்போர்டு அட்வான்ஸ்டு லேனர்ஸ் அகராதியின் 9-வது பதிப்பில் கீமா', 'பாப்பட்' உள்ளிட்ட சுமார் 240 இந்திய ஆங்கிலச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிப்பில், இந்திய சமையலறைகளில் புழக்கத்தில் உள்ள சொற்களான 'கீமா' (சுவையான கொத்துக்கறி), பாப்பட் (அப்பளம்), 'கறி லீஃப்' (கறிவேப்பிலை) உள்ளிட்டச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் அகராதி தயாரிப்புப் பிரிவு தலைமை அதிகாரி பாட்ரிக் ஒயிட் நூலை வெளியிட்டு கூறும்போது, "உலகத்தின் பல மொழிகளிலிருந்தும் பெறப்பட்ட தாக்கங்களை உள்ளடக்கிய ஓர் உலக மொழி ஆங்கிலம். அதேபோல இந்திய உணவும் உலகப் புகழ்பெற்றது. உலகப் பயன்பாட்டில் இடம்பெற்றுவிட்ட சொற்களைப் பிரதிபலிக்கும்விதமாக அச்சொற்களை உள்ளடக்கி இந்த அகராதியை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இந்தி மொழியிலிருந்து 60 சதவீதத்திற்கும் மேலாக புதிய இந்திய ஆங்கில சொற்கள் உருவாகியுள்ளன. நாங்கள் உலகம் முழுவதிலிருந்தும் புதியச் சொற்களை, அடிக்கடி அவை பயன்படுத்தப்படுவதன் அடிப்படையிலேயே பரிசோதித்துத் தேர்ந்தெடுக்கிறோம்.
அந்த வகையில், இதுவரை 900-ல் இருந்து 1000 இந்தியச் சொற்கள் கண்டறியப்பட்டு, அவர் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இம்முறை மிகப் பெரிய எண்ணிக்கையில் புதிய இந்தியச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த 9-வது பதிப்பில் மட்டும கூடுதலாக 900 சொற்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 20 சதவீத சொற்கள் இணையதள உலகிலிருந்து பெறப்பட்டுள்ளவை" என்றார் அவர்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான ஆங்கில மொழி கற்பித்தலின் (ELT) அகராதி மற்றும் இலக்கணக் குறிப்புகள் நூல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வரும் 20 ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமை பொறுப்பேற்று பாட்ரிக் ஒயிட் பணியாற்றிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.