Last Updated : 22 Jan, 2015 01:26 PM

 

Published : 22 Jan 2015 01:26 PM
Last Updated : 22 Jan 2015 01:26 PM

ஊழல் விவகாரம்: ராஜபக்சவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சவைப் பழிவாங்கும் நோக்கத்தோடு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டில் பொறுப்பேற்று இருக்கும் மைத்ரிபால சிறிசேனா அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தனது பணியை செய்யும் அரசின் மீது பழி கூறுவதை அனுமதிக்க முடியாது என்று ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் ஊடக அமைச்சர் கயந்தா கருணாத்தில்லாகே கூறுகையில், "இலங்கையின் புதிய அரசு இங்கு நடந்திருக்கும் ஊழல் முறைகேடுகளை விசாரித்து நீதியை நிலைநாட்ட மட்டுமே எண்ணுகிறது. பழிவாங்கும் நோக்கத்தோடு அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல.

முன்னாள் அதிபர் அவருடைய கருத்தைத் தெரிவிக்கலாம். குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தனது பணியை செய்யும் அரசின் மீது பழி கூறுவதை அனுமதிக்க முடியாது. தவறான குற்றச்சாட்டுகளை அரசு பொறுத்துக்கொள்ளாது" என்றார்.

மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களுக்கு காவல் துறையிடமிருந்து தொல்லைத் தரப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைக்கும் கயந்தா மறுப்பு தெரிவித்தார்.

முன்னதாக திங்கட்கிழமையன்று இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் பண்ணை வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது புகார் தெரிவித்ததுபோல ஆடம்பர கார்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், இலங்கையின் புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்ற பின்னர், ராஜபக்ச தங்கியிருந்த அதிபர் மாளிகையை சிறிசேனாவிடம் ஒப்படைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்து ரூ.1500 கோடியைக் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

கொழும்பில் உள்ள அலரி (அதிபர்) மாளிகையின் ரகசிய இடத்தில் ரூ.1,500 கோடியை ராஜபக்ச பதுக்கி வைத்ததாகவும், அவர் மாளிகையை காலி செய்தபோது அந்தப் பணத்தை அவர் மறந்து சென்றுவிட்டார் என்று அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x