

தோல்வியடைவது உறுதியான பிறகும் கூட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச, தமிழர் பகுதிகளில் ராணுவத் துருப்புகளை ஆங்காங்கே நிறுத்த ராணுவ தலைமையை தொடர்பு கொண்டதாக புதிய அதிபர் சிறிசேனாவின் செய்தி தொடர்பாளர் ரஜித சேனரத்ன சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கடைசி வாக்குகள் எண்ணப்படும் வரை காத்திருக்காமல் தனது தோல்வியை ராஜபக்ச ஒப்புக் கொண்டதற்காக அவர் மீது பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ரஜித சேனரத்ன, “துருப்புகளை ஆங்காங்கே கொண்டு நிறுத்த ராணுவத்தலைமைக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை.
கடைசி நேரத்திலும் ராஜ்பக்ச அலுவலகத்தில் இருந்தார். ஆனால், தோல்வி உறுதியானதும் வேறுவழியின்றி அவர் ஒப்புக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்” என்றார்.
இலங்கை ராணுவத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெனரல் தயா ரத்னாயகவுக்கு ராஜபக்ச நெருக்கடி கொடுத்துள்ளார்.
புதிய அதிபரின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் ரஜித சேனரத்ன, சுகாதார அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ராஜபக்ச நேரடியாக ராணுவத் தலைமையை தொடர்பு கொண்டாரா அல்லது கோத்தபய ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு முயற்சித்தாரா என்பது பற்றிய கேள்விக்கு சேனரத்ன பதிலளிக்க மறுத்தார்.
“ராஜபக்ச தொடர்ந்து அலுவலகத்தில் இருக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சதி இருந்து வந்தது. தேர்தல் விதிமுறைகளை மீறி கோத்தபய தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளார். பொது ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை புதிய நிர்வாகம் நிறுத்தும்.” என்று சேனரத்ன உறுதி அளித்தார்.
தமிழ் மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகிச்செல்ல அச்சுறுத்தும் விதமாக தமிழர் பகுதிகளில் ராணுவத்தை நிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் சதி செய்தது என்று சேனரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
“எங்களுக்கு பழிவாங்குவதில் நம்பிக்கையில்லை, அதற்காக தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற அர்த்தமும் இல்லை.” என்றார் சேனரத்ன.