

இந்தோனேசிய கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் சென்ற மேலும் 7 பயணிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரையில் மொத்தம் 16 பேரின் உடல்கள் மீடகப்பட்டுள்ளன.
கடந்த 28-ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. மூன்று நாள்கள் தேடுதலுக்குப் பிறகு கடந்த 30-ம் தேதி விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகளின் உடல்கள் கண்டறியப்பட்டன.
அப்பகுதியில் தொடர்ந்து மோசமான வானிலை நீடிப்பதால் மீட்புப் பணி மிகுந்த சவால் நிறைந்ததாக உள்ளது.
தற்போது போர்னியோ தீவு அருகே மற்ற பயணிகள் உடல்களை தேடும் பணியை 9 விமானங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஏர் ஏசியா விமானத்தின் பெரும் பகுதி ஆழ்கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதால் அதிநவீன சோனார் கருவிகள் மூலம் விமான பாகங்களை தேடும் பணி தொடர்கிறது.
முன்னதாக விமானத்தின் கதவுகள் உள்ளிட்ட சில பாகங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கறுப்புப் பெட்டியை தேடும் பணி தனிக் குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. கறுப்புப் பெட்டி இருக்கும் இடத்தை இதுவரை துல்லியமாக கணிக்க முடியவில்லை.