

கணவர் கொடுமைப்படுத்துவதாக பேஸ்புக்கில் பொய்யான புகார் பரப்பி அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, மனைவிக்கு ரூ.6,50,000 அபராதம் விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூபின் கிரியூ என்ற பெண் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவல் எழுதியிருந்தார். 18 ஆண்டுகளாக தன்னை கொடுமைப்படுத்தியும் அவமதித்தும் வந்த கணவர் மிரோ டேப்ரவ்ஸ்கியை விட்டு தற்போது விலகிவிட்டேன் என்று கூறியிருந்தார். இதனை சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை செய்தியாக வெளியிட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றிய வழக்கை விசாரித்த மேற்கு ஆஸ்திரேலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி, டேப்ரவ்ஸ்கிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். ரூபின் கிரியூ, பேஸ்புக்கில் தான் சொன்ன புகார்களை நிரூபிக்கவில்லை என்றார் நீதிபதி.
“வீடுகளில் வன்கொடுமையும் பிற தவறுகளும் நடப்பது உண்மைதான் என்றாலும் நடுநிலையான சாட்சிகள் இல்லாமல் புகார் உண்மையா பொய்யா என்பதை நிரூபிக்கமுடியாது. ஒருவர் மற்றவர் மீது சொல்லும் அவதூறு குற்றச்சாட்டுகளை ஒரு தரப்பை வைத்து உறுதிசெய்து ஏற்கமுடியாது” என்றார் நீதிபதி.
“இந்த வழக்கில் கிரீயு நம்பத்தகுந்த ஆளாக இல்லை. தனது வழக்குக்கு உதவும் என்ற வகையில் மனதில் தோன்றியதை எல்லாம் எழுத அவர் தயாராக இருக்கிறார். அதேவேளையில் டேப்ரவ்ஸ்கியின் ஆதாரங்கள் சிலவும் நம்பக்கூடியதாக இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது டேப்ரவ்ஸ்கிக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு சொல்லமுடியும்” என்றார் நீதிபதி.