Published : 08 Jan 2015 10:35 AM
Last Updated : 08 Jan 2015 10:35 AM

உலக மசாலா: செல்லப் பிராணியாக ஓநாய்

ஆலிசன் நாய்ஸ் பிரிட்டனில் வசித்து வருகிறார். உடற்பயிற்சியாளராக இருக்கும் 36 வயது ஆலிசனுக்கு, 20 வயதிலேயே மெனோபாஸ் வந்துவிட்டது. இனி குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். கவலையில் இருந்த ஆலிசனைத் தேற்றி, 30 வயதில் திருமணம் செய்துகொண்டார் ரிச்சர்ட். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆலிசனின் வயிறு சற்றுப் பெரியதாக மாறியது. சைக்கிள் ஓட்டும்போது மிகவும் களைப்படைவதாக உணர்ந்த ஆலிசன் மருத்துவரைப் பார்த்தார். பரிசோதனை முடிவில், ஆலிசன் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறினார். அதிர்ச்சியும் ஆனந்தமுமாக இருந்தார் ஆலிசன். அடுத்த பன்னிரண்டாவது நாள் பெண் குழந்தை பிறந்தது. பொதுவாக 45 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ், அரிதாக இளம் வயதிலேயே சிலருக்கு ஏற்பட்டுவிடுகிறது. மெனோபாஸுக்குப் பிறகு குழந்தை பிறந்த காரணம் இன்னும் சரியாக மருத்துவர்களுக்கே புரியவில்லை. எதிர்பாராமல் கிடைத்த குழந்தையால் ஆலிசனும் ரிச்சர்ட்டும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

மருத்துவ உலகத்துக்குப் புதிய சவால்…

கசக்ஸ்தான் அல்மாடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நாய்களுக்குப் பதிலாக, ஓநாய்களை வீட்டுப் பிராணிகளாக வளர்க்கின்றனர். வேட்டைக்காரர்களிடம் முப்பதாயிரம் ரூபாய்க்கு ஓநாய்க் குட்டிகளை வாங்கி, மூன்று ஆண்டுகளில் வீட்டுப் பிராணிகளாக மாற்றி விடுகின்றனர். நாய்களைப் போலவே ஓநாய்களுக்கும் மூன்று வேளை உணவு கொடுக்கின்றனர். நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கின்றனர். ஓநாய்களைக் கண்டு அந்தக் கிராமத்தினர் பயம்கொள்வதில்லை. ஆனால் விலங்கியல் ஆர்வலர்கள், ஓநாய்கள் வீட்டில் வளர்க்கப்படுவது நல்லதல்ல… ஓநாய் ஓர் அணுகுண்டு போன்றது, எந்த நேரமும் அதன் இயல்பு வெளிப்படலாம் என்கிறார்கள். ஆனால் ஏற்கெனவே முன்னாள் சோவியத் யூனியனின் பல பகுதிகளில் ஓநாய்களை வீட்டு விலங்காக வளர்த்து வந்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் ஓநாய்களை வைத்துக்கொள்வது இப்போது கசக்ஸ்தானில் ஃபேஷனாகி வருகிறது.

எல்லா விலங்குகளையும் அடிமையாக்கிடறதில் மனுஷனுக்கு அப்படி என்ன ஆர்வமோ!

சுவிஸ் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலை பசுமையாகவும் பனி படர்ந்தும் காணப்படும். அங்கே பாறை வடிவில் மரத்தால் செய்யப்பட்ட சிறிய வீட்டை அமைத்திருக்கிறது ஜெனீவாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். ஓர் அலமாரி, நாற்காலி, மேஜை என்று கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த வீடு. சார்லஸ் ஃபெர்டினாண்ட் ராமுஸ் என்ற எழுத்தாளரின் நாவலில் வரும் கதாநாயகன் இதுபோன்ற ஒரு பாறை வீட்டில் ஏழு வாரங்கள் வசிக்கிறார். நாவலில் வந்த விஷயத்தை நிஜமாகச் செய்து, ஆறு வாரங்கள் தங்கியிருக்கிறார்கள் ஆண்ட்ரே பிளாக், க்ளாட் பேரெண்ட் இருவரும். உங்களால் இந்தப் பாறை வீட்டைக் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார்கள்.

அடடே! சுவாரசியமான விஷயமா இருக்கே…

தவளைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கக்கூடியவை. முட்டையிலிருந்து வெளிவரும் தலைப்பிரட்டைகள் மீன்களைப் போலவே காட்சியளிக்கும். இந்தோனேஷியாவில் ஒரு தவளை இரண்டு நீண்ட பற்களோடு கண்டறியப்பட்டது. அந்த வகை பெண் தவளையைத் தொடர்ந்து கண்காணித்ததில் முட்டையிடாமல், தலைப்பிரட்டைகளாகவே குட்டிகளை ஈன்றெடுத்தது தெரியவந்தது. இரட்டை வாழ்விகள் எல்லாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கக்கூடியவைதான். முதல் முறையாக குட்டிப் போடும் தவளையைக் கண்டு வியப்படைந்த ஆராய்ச்சியாளர்கள், மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால்தான் காரணங்களை அறிய முடியும் என்கிறார்கள்.

மனுஷன் அறியாத விஷயங்கள் இன்னும் எவ்வளவோ உலகத்துல இருக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x