

அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான புரிதல் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
மோடி, ஒபாமா இடையே நல்ல புரிதல் உள்ளது. இது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கக்கூடியதாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-30ம் தேதிகளில் இரு தலைவர்களும் முதன்முதலாக வெள்ளை மாளிகையில் சந்தித்துக் கொண்டனர். உணவருந்தும் போது இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். மேலும், தனிப்பட்ட முறையிலும் உரையாடினர். மோடியுடன், மார்ட்டின் லூதர் கிங்கின் கல்லறைக்கு ஒபாமா சென்றது மிகவும் அர்த்தம் பொதிந்ததாகும்.
எனவே இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள புரிதலும் தனிப்பட்ட உறவும் நம் நாடுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். இந்தியா, மோடி, மக்களுடனான நம் உறவு அமெரிக்காவுக்கு மதிப்புடையதுதான். மோடி தொலைநோக்கு சிந்தனையுடையவராக இருப்பது இரு தரப்பு உறவுக்கு சிறந்த சொத்தாக அமையும். இரு தலைவர்களின் தேர்தல் பிரச்சார உத்தியும் நாடுகளின் அரசியல் போக்கை மாற்றியமைத்தன. இதிலும் ஒற்றுமை நிலவுகிறது.
உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையே மிகச்சிறந்த உறவு நிலவுகிறது. இந்த உறவின் பெரும் பலன் மக்களுக்கு பயனாக மாற வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவுக்கான வளர்ச்சித் திட்டம் நம்மிடம் இருக்கும் நிலையில் ஒபாமாவின் இந்தியப் பயணம் அமைகிறது.
இந்திய குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற முறையில், உலகுக்கு மிக முக்கியமான செய்தி சொல்லப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதில் நாட்டு மக்களுக்கு உள்ள ஈடுபாட்டை அது வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒபாமா மகள்கள் வரவில்லை
ஒபாமாவின் இந்திய வருகையின்போது, அவரின் இரு மகள்கள் சாஷா (16) மற்றும் மலியா (13) ஆகியோர் உடன் வர மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா வருகை உறுதி செய்யப் பட்டுள்ளது.