இலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா விருப்பம்

இலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா விருப்பம்
Updated on
1 min read

இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்ச தோல்வியைத் தழுவியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா அதிக வாக்குகளைப் பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருப்பதாவது:

தேர்தல் முடிவுகளை ராஜபக்ச ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய அதிபரிடம் ஆட்சி அதிகாரத்தை அவர் சுமுகமாக ஒப்படைக்க வேண்டும். இலங்கையில் அமைதியாக தேர்தலை நடத்திய அந்த நாட்டு தேர்தல் ஆணையர், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு அமெரிக்காவின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விவகாரத்தால் அதிபர் ராஜபக்சவுக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in