Published : 13 Jan 2015 12:05 PM
Last Updated : 13 Jan 2015 12:05 PM

உலக மசாலா: 300 கிலோ எடை பன்றி

கனடாவைச் சேர்ந்த ஸ்டீவ், டெரெக் இருவரும் ஒரு பன்றியைத் தத்தெடுத்தனர். அதற்கு எஸ்தர் என்று பெயரிட்டு வளர்த்தனர். 30 கிலோ எடைகொண்டதாக இருந்த எஸ்தர், இரண்டே ஆண்டுகளில் அசுர வேக வளர்ச்சியை அடைந்துவிட்டது. ஒரு துருவக்கரடியின் அளவுக்குப் பிரமாண்டமாக வளர்ந்து, 303 கிலோ எடையுடன் நிற்கிறது. எஸ்தருடன் இன்னும் இரண்டு நாய்களும் பூனைகளும் வளர்கின்றன.

வாரத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் இவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. உடல் வளர்ச்சியில் எஸ்தரின் தவறு ஒன்றும் இல்லை. என்ன செலவானாலும் எஸ்தரைக் கைவிடுவதாக இல்லை என்கிறார்கள் ஸ்டீவ்வும் டெரெக்கும். எஸ்தருக்காக ஃபேஸ்புக் ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டரை லட்சம் பேர் எஸ்தரைப் பின்தொடர்கிறார்கள்.

இங்கே எல்லாம் மனுசங்களையே மதிக்க மாட்டேங்கிறாங்க…

சீனாவின் செங்க்டு நகரில் இருந்து சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் பனிப்புயல் காரணமாகக் கிளம்பத் தாமதமானது. காத்திருந்த பயணிகள் மிகவும் கோபம் அடைந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு விமானம் கிளம்ப ஆரம்பித்தது. ஸ்ஹோ என்ற பயணிக்கு அப்பொழுதும் கோபம் குறையவில்லை. வேகமாகச் சென்று, விமானத்தின் அவரச வழிக்கான கதவுகளைத் திறந்துவிட்டார். 25 பயணிகள் பயந்து அலறினர். ஸ்ஹோவைச் சமாளிக்க முடியாததாலும் கதவுகளை அடைக்க முடியாததாலும் விமானம் மீண்டும் தரை இறங்கியது. ஸ்ஹோ மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐயோ… உங்க கோபத்தால மத்தவங்க உயிருக்கும் ஆபத்தாயிருச்சே…

சின்னஞ்சிறு அன்னப் பறவை ஒன்று தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ச்சியாகப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் ஒரு சீனப் பெண். ஹெனான் மாகாணத்தில் சன்மென்ஸியா பூங்காவில் உள்ள ஏரியில் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் ஹைகெர் யான் யான். ஏரியில் தாயும் குஞ்சுமாக நீந்திக்கொண்டிருந்த அன்னங்களில் திடீரென்று தாய் இறந்துவிட்டது. அசைவற்று, உடல் மிதப்பதைக் கண்ட குஞ்சு, தாயின் உடலை அலகால் அசைத்துப் பார்த்தது. சுற்றிச் சுற்றி வந்தது. சட்டென்று தலையைத் தண்ணீருக்குள் விட்டது. அடுத்த சில நிமிடங்களில் குஞ்சும் இறந்து, மிதந்தது. புகைப்படங்களைப் பார்த்த நிபுணர்கள், பறவை தற்கொலை செய்துகொள்கிறது என்ற செய்தி வியப்பளிப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

ஐயோ… பாவம்…

அமெரிக்காவின் சில மாகாணங்களில் ஆண்டுதோறும் கடுமையான பனிப் பொழிவு நிலவுகிறது. வீட்டில் இருந்து வெளியேற முடியாத சூழ்நிலையால், இந்தக் காலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு வந்தன. ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பாடங்களைப் படிக்கும் வகையில், ‘இ-லேர்னிங்’ திட்டத்தைப் பள்ளிகள் கொண்டுவந்துவிட்டன. லேப்டாப், டேப்லெட்கள் மூலம் குழந்தைகள் வீட்டிலேயே பத்திரமாகப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

குழந்தைகள் சந்தோஷப்படுவாங்களா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x