

ஆப்கான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் ஒன்றாக பாவித்து எதிர்த்துப் போரிட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறினார்.
இந்தியாவில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் (வைப்ரன்ட் குஜராத்) கலந்து கொண்ட ஜான் கெர்ரி தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் சென்றார்.
இஸ்லாமாபாத் விமான நிலையத்துக்கு சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் நாட்டின் உள் துறை மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்பை ஜான் கெர்ரி சந்தித்துப் பேசிய பின்னர் ஜான் கெர்ரி, அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸுடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹக்கானி இயக்கம், லஷ்கர்- இ தாய்பா, தாலிபான் ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் மற்றும் அதன் சகோதர நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
இந்த இயக்கங்களை அனைத்தையும் ஒன்றாக பாவித்து எதிர்க்க வேண்டியது நமது கடமை. இந்த இயக்கங்கள் அனைத்தும் பாகிஸ்தான் வரலாற்றில் பின்னுக்கு தள்ளப்பட வேண்டியவை. ஆனால் இந்த காரியம் மிகவும் பெரியது தான்.
பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதிகளானாலும் மற்ற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதிகளானாலும் அனைத்துமே ஒன்றுதான். பயங்கரவாதம் அனைத்து வகையிலும் எதிர்க்க வேண்டியது.
பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடப்பது அமெரிக்காவுக்கு கவலையூட்டுவதாக உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை" என்றார்.