ராணுவ ஆட்சி அமைக்கும் சதியில் ஈடுபடவில்லை: ராஜபக்ச

ராணுவ ஆட்சி அமைக்கும் சதியில் ஈடுபடவில்லை: ராஜபக்ச
Updated on
1 min read

ராணுவ ஆட்சியை கொண்டுவர முயன்றதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த முடிந்த இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது, தனக்கு பாதகமான முடிவு வந்ததால் ராணுவ ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும், அதற்கு ராணுவ தளபதி இணங்க மறுத்த பின்னரே ராஜபக்ச பதவி விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தத் தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கையில் ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசும் தெரிவித்தது.

இந்த நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜபக்ச தனது அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

"தேர்தல் முடிவுகளை பாதிக்கச் செய்யும் நோக்கத்தோடு ராணுவத்தை வழிநடத்தவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை.

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே, நான் எனது தோல்வியை ஒப்புக்கொண்டு மைத்ரிபால சிறிசேனாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "ராஜபக்ச தேர்தலில் தாம் தோற்றவுடன் ராணுவத் துருப்புகளை நாடு முழுவதும் களம் இறக்க ராணுவ படைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் தயா ரத்னாயகேவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால், ராஜபக்சவின் சட்டவிரோத கோரிக்கைக்கு செவிசாய்க்க தலைமைத் தளபதி மறுத்துவிட்டார்.

கடைசி நிமிடம் வரை அவர் பதவியில் இருப்பதற்காக கடுமையாக முயன்றுள்ளார். வேறு வழிகளே இல்லை என்று தெரிந்தபிறகுதான் அவர் தன்நிலையை உணர்ந்து வெளியேற முடிவு செய்தார்" என்று சிறிசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரான ரஜித சேனரத்னே தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in