குஜராத் கடல் எல்லையில் படகு வெடித்துச் சிதறிய சம்பவம்: இந்திய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

குஜராத் கடல் எல்லையில் படகு வெடித்துச் சிதறிய சம்பவம்: இந்திய குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு
Updated on
2 min read

குஜராத் கடல் எல்லைப் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பிய படகு வெடித்துச் சிதறியதற்குப் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர், சிந்த் மாகாணத்தின் கேடி பந்தர் பகுதியில் இருந்து சிறிய ரக படகு ஏதும் புறப்படவில்லை. திட்டமிட்டே பாகிஸ்தானுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்தியா தவறான தகவல்களை பரப்பியுள்ளது.

முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் சிறிய ரக மர்ம கப்பல் அத்துமீறி நுழைய முற்பட்டது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட அந்த கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் இடைமறித்து விரட்டியபோது நடுக்கடலில் வெடித்துச் சிதறியது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இந்திய எல்லைக்குள் சிறிய ரக கப்பல் ஊடுருவக்கூடும் என்று மத்திய உளவுத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் குஜராத்தின் போர்பந்தர் பகுதி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் அன்றிரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடலோர காவல் படையின் கண்காணிப்பு விமானமும் அந்தப் பகுதியில் வட்டமடித்து நோட்டமிட்டது.

சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டையில் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் சுமார் 365 கி.மீ. தொலைவில் சிறிய ரக மர்ம கப்பல் இந்திய எல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் அந்தப் பகுதியில் அரண் அமைத்து இடைமறித்தன.

பாகிஸ்தான் மர்ம கப்பலில் சுமார் 4 பேர் இருந்தனர். அவர்கள் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்களை பார்த்ததும் மீண்டும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி கப்பலை திருப்பி தப்பிக்க முயன்றனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடலோர காவல் படையினர், மர்ம கப்பலை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். ‘கப்பலை நகர்த்தக்கூடாது. நாங்கள் கப்பலை சோதனை யிடப்போகிறோம்’ என கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மர்ம கப்பலின் வேகம் அதிகரித்தது. இந்திய கடலோர காவல் படையினரும் கப்பலை விடாமல் துரத்தினர். சுமார் ஒரு மணி நேரம் மர்ம கப்பல் கடலில் போக்கு காட்டி தப்பிக்க முயன்றது. ஆனால் கடலோர காவல் படை கப்பல்கள் நெருங்கியதால் நடுக்கடலில் அந்த மர்ம கப்பல் வெடித்துச் சிதறியது.

பாகிஸ்தானில் இருந்து வந்த மர்ம கப்பல் முழுவதும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டி ருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. அதனால் கப்பல் முழுவதும் தீக்கிரையாகி சாம்பலாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த கப்பலில் இருந்த மர்ம நபர்களை கடலோர காவல் படையினர் நள்ளிரவு முழுவதும் கடலில் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மர்ம கப்பலில் வந்த நபர்கள் தற்கொலைப் படை தீவிரவாதிகளாக இருக்கலாம். அவர்களும் கப்பலோடு சேர்ந்து வெடித்துச் சிதறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், குஜராத் கடல் எல்லைப் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பிய படகு வெடித்துச் சிதறியதற்குப் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி இருக்கலாம் என்ற சந்தேகத்தை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in