Last Updated : 27 Jan, 2015 11:01 AM

 

Published : 27 Jan 2015 11:01 AM
Last Updated : 27 Jan 2015 11:01 AM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 9

பிரான்ஸ் மக்களுக்கு சைக்ளிங் மிகவும் பிடிக்கும். அங்கு வெளியாகிக் கொண்டிருந்த ‘எல் வெலோ’ (L’Velo) என்ற சைக்ளிங் தொடர்பான சிறப்புப் பத்திரிகை, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட யூத அதிகாரிக்கு ஆதரவாகவும் அரசைக் கண்டித்தும் கட்டுரைகள் எழுத அங்கு பணியாற்றிய சிலர் அதிலிருந்து விலகினர்.

யூதர்கள் மீது நல்ல கருத்து இல்லாதவர்கள் என்று கருதப்பட்ட இவர்கள், ‘எல்-ஆட்டோ-வெலோ’ என்ற பெயரில் புதிய இதழை தொடங்கினார்கள். வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றார்கள். இவர்கள் மீது எல் வெலோ வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக தனது பெயரை எல்-ஆட்டோ என்று மாற்றிக் கொண்டது புதிய இதழ்.

இதன் காரணமாகவோ, என்னவோ புதிய இதழின் விற்பனை சரிந்தது. இழந்த வாசகர்களை பெற்றாக வேண்டுமே. என்ன செய்யலாம்? யோசித்த எல்-ஆட்டோ இதழ் நிர்வாகிகளுக்குத் தோன்றியதுதான் சைக்ளிங் போட்டி - அதாவது டூர் டெ பிரான்ஸ். இந்த அறிவிப்புக்குப் பிறகு அதன் விற்பனை ஆறு மடங்கு அதிகமானது. அவர்கள் விலகி வந்த இதழான எல் வெலோ விற்பனை சரிந்து திவால் ஆனது.

1903-ல் இந்த சைக்ளிங் போட்டி தொடங்கியபோது சமதளத்தில்தான் இது நடத்தப்பட்டது. இப்போது இருப்பதுபோல் மலைப்பகுதிகளில் எல்லாம் ஏற வேண்டாம். ஆனால் அப்போது கடக்க வேண்டிய தூரம் அதிகம் - சுமார் 400 கிலோ மீட்டர். தொடக்க ஆண்டில் 60 சைக்ளிங் வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 49 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி உலக சைக்ளிங் போட்டிகள் தொடங்கிய சுமார் 10 ஆண்டுகளில் வேறொன்று தொடங்கியது - முதலாம் உலகப்போர்!

ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாகச் சொன்னால் முதலாம் ஐரோப்பிய போர்தான். ஒருபுறம் ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி, இத்தாலி நாடுகள். மறுபுறம் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், அயர்லாந்து நாடுகள்.

ரஷ்யாவும், ஜெர்மனியும் நட்பு நாடுகள். இவை எப்படி எதிர் துருவங்கள் ஆயின? இங்கிலாந்தும், பிரான்ஸும் எதிரிகள் அல்லவா, அவை எப்படி ஒரே அணியில் சேர்ந்தன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நீண்டவை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பார்ப்போம்.

சக்தி வாய்ந்த பீரங்கி படையைக் கொண்டிருந்த ஜெர்மனி, பெல்ஜியத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டபிறகு பிரான்ஸை முற்றுகையிட்டது. பாரீஸின் வெளி எல்லை வரை ஜெர்மன் ராணுவம் முன்னேறியது. ஆனால் அவர்களைப் பின்வாங்கவும் விடாமல் முன்னேறவும் விடாமல் இருபுறமும் சூழ்ந்த பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் ராணுவங்கள் பலத்த சேதத்தை உண்டாக்கின. ஜெர்மனியின் இரு பிரிவு ராணுவங்களையும் இணையவிடாமல் பிரான்ஸ் ராணுவம் செயல்பட்டதால் பாரீஸை தக்க வைத்துக் கொள்வது சாத்தியமானது.

பிரான்ஸை ஜெர்மனியால் முற்றுகையிட முடியவில்லை என்பது ஒரு திருப்புமுனை. இதற்குப் பிறகும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதலாம் உலகப்போர் தொடர்ந்தது என்றாலும் ஜெர்மனியின் தொடர் தோல்விகளுக்கு பிள்ளையார் சுழியிட்டது பிரான்ஸில் அதற்கு ஏற்பட்ட மூக்குடைப்புதான்.

எதிர்பாராமல் வேறொரு பகுதியிலிருந்து ரஷ்யா ஜெர்மனியின் மீது தாக்குதலை நடத்தியதும் ஜெர்மனியின் தோல்விக்கு ஒரு காரணம். தவிர பிரிட்டன் பிரான்ஸுக்கு ஆதரவாக இந்த அளவு செயல்படும் என்பதை ஜெர்மனி எதிர்பார்க்கவில்லை. எப்படியோ ஜெர்மனி மொத்தத்தில் ‘மகத்தான’ தோல்வி கண்டது.

1919 ஜூன் 28 அன்று சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. பிரான்ஸில் உள்ள வெர்செயிலெஸ் என்ற இடத்தில் அது கையெழுத்தானது. முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை வடிவமைத்ததில் பிரான்ஸுக்குப் பெரும் பங்கு உண்டு. மீண்டும் ஒரு யுத்தத்தை ஜெர்மனி தொடங்கிவிட முடியாத அளவுக்கு கடுமையான நிபந்தனைகள். 60 லட்சம் ராணுவ வீரர்களைக் கொண்டிருந்த ஜெர்மனி, தன் ராணுவத்தை வெறும் ஒரு லட்சம் பேர் கொண்டதாக சுருக்கிக் கொள்ள வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்களையும், ராணுவ விமானங்களையும் விற்றுவிட வேண்டும். அதிகபட்சம் ஆறு போர்க் கப்பல்களைத்தான் அது வைத்திருக்கலாம். தான் கைப்பற்றிய பிரெஞ்சு பகுதிகளை அது மீண்டும் தந்துவிட வேண்டும்.

இவற்றைவிட கடுமையானதாக இருந்தது வேறொரு நிபந்தனை. கூட்டு நாடுகளுக்கு (முக்கியமாக பிரான்ஸுக்கு) முதலாம் உலகப் போரினால் உண்டான நஷ்டத்தை ஜெர்மனி ஈடு செய்ய வேண்டும். அந்த நஷ்ட ஈடு என்பது எவ்வளவு? கணக்கெடுக்கப்படவில்லை. ஆனால் முதல் தவணையாக 132 பில்லியன் தங்க மார்க்குகளை (மார்க் என்பது ஜெர்மானிய நாணயம்) தர வேண்டும் என்றது உடன்படிக்கை. இப்படியொரு மாபெரும் தொகையைத் தவணைகளில் ஜெர்மனி செலுத்தி முடித்தபோது வருடம் கி.பி. 2010 என்று ஆகிவிட்டது.

‘இது மிகவும் ஒருதலைப் பட்சமான ஒப்பந்தம்’ என்ற கருத்தை தன் நாட்டு மக்கள் மனதில் பதிய வைப்பதில் வெற்றி கண்டார் ஹிட்லர். ‘தவறுகளை சரி செய்ய வேண்டும்’ என்று அவர் களத்தில் இறங்க, பிறந்தது இரண்டாம் உலகப்போர்!

மேற்படி உடன்படிக்கையால் உண்டான திருப்புமுனைகளில் முக்கியமானது ‘லீக் ஆஃப் நேஷனஸ்’ உருவாக்கம். ஐ.நா. சபையின் முன்னோடி என்று இதைச் சொல்லலாம்.

யுத்தம் என்ற ஒன்று இல்லாமல் நாடுகள் சமரசமாகப் போக வேண்டும். இதற்கு வழிவகுக்கதான் மேற்படி அமைப்பு உருவானது. ஆனால் அடுத்த உலகப்போரை அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x