

குஜராத் அருகே இந்திய கடலோர காவல் படையினர் இடைமறித்தபோது நடுக்கடலில் வெடித்துச் சிதறிய கப்பல் கராச்சியிலிருந்து புறப்படவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் கூறியதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைப் போல மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக, பாகிஸ்தான் கப்பல் இந்தியாவை நோக்கி சென்றதாகவும் அதை இந்திய கடலோர காவல் படையினர் இடைமறித்தபோது வெடித்துச் சிதறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஊடகங்களில் வெளியான தகவல்படி, கராச்சியின் கேதி பந்தர் துறைமுகத்திலிருந்து எந்த கப்பலும் இந்தியாவை நோக்கி பயணிக்கவில்லை. இதுதொடர்பாக வெளியான தகவல் தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ்தான் மீது சர்வதேச அரங்கில் தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காகவே இந்தியா இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகிறது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி எல்லையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதை திசை திருப்புவதற்காக இதுபோன்ற புகார் கூறப்படுகிறது” என்றார்.
நேற்று முன்தினம் 4 பேருடன் சிறிய ரக கப்பல் ஒன்று குஜராத் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. சந்தேகத்தின் பேரில் அதை இடைமறித்த இந்திய கடலோர காவல் படையினர், கப்பலை சோதனையிட வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் இதை அறிந்ததும் வேறு திசையில் வேகமாக கப்பலை செலுத்த முயன்றனர்.
இந்திய கடலோர காவல் படையினரும் விடாமல் துரத்தியதால், நடுக்கடலில் அந்த கப்பல் வெடித்துச் சிதறியது. பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்தக் கப்பல் வந்திருக்கலாம் என்றும் அதில் வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மும்பை தாக்குதல் போல இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.