

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களைக் கண்டித்து அந்த நகரில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 50 நாடுகளின் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.
பாரீஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து மற்றொரு தீவிரவாதி, பெண் போலீஸ் அதிகாரியையும் சூப்பர் மார்க்கெட்டில் 4 பேரையும் சுட்டுக் கொன்றார்.
பிரான்ஸ் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையில் மூன்று தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் தொடர்புடைய ஹையத் என்ற பெண் தீவிரவாதியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரான்ஸ் மட்டுமன்றி பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அண்மைகாலமாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்படும் வகையில் பாரீஸில் நேற்று பிரமாண்ட தீவிரவாத எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.
இதில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரோவ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அவர்களை பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் வரவேற்றார். அப்போது அவர் பேசியபோது, இன்று உலகின் தலைநகராக பிரான்ஸ் மாறியுள்ளது, தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. இந்த நேரத்தில் தீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பேரணியை முன்னிட்டு பாரீஸ் நகரம் முழுவதும் போலீஸாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் பேரணியில் பங்கேற்பதற்கு வசதியாக ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்தில் நேற்று கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
சுமார் 10 லட்சம் பேர் பேரணியில் பங்கேற்றனர். அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஜெர்மனி, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் பாரீஸில் குவிந்திருந்தனர்.