

சீனாவின் யங்கட்ஸ் நதியில் வெள்ளோட்டத்தின்போது படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த இந்தியர் உட்பட 22 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
சீனாவின் மிகப்பெரிய நதி யங்கட்ஸ். கிழக்கு மாகாணம் ஜியான்ஸுவில் பாய்ந்தோடும் இந்த நதியில் கடந்த வியாழக்கிழமை படகு ஒன்று வெள்ளோட் டம் விடப்பட்டது. அதில் இந்தியர் ஒருவர் உட்பட பல்வேறு நாடு களைச் சேர்ந்த 25 பேர் இருந்தனர். அடுத்த சில விநாடிகளில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தண்ணீரில் தத்தளித்த 3 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்தது. ஆனால் இந்தியர் உட்பட 22 பேரும் இறந்து விட்டனர் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இறந்தவர்களில் 4 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மற்ற அனைவரும் சீனர்கள். விபத்தில் பலியான இந்தியர், சிங்கப்பூரில் வசித்த ஹரிகிருஷ்ண மணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷாங்காயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியபோது, ‘‘நீரில் மூழ்கி பலியான ஹரிகிருஷ்ணனின் குடும்பத்தினரை சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’’ என்றனர்.
ஜிங்ஜியாங் மற்றும் ஸாங்ஜியாகங் இடையே படகு சென்று கொண்டிருந்தபோது நதியில் மூழ்கி உள்ளது என்று ஜியாங்ஸு கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘படகை கட்டி முடித்தவுடன் விதிமுறைகளை பின்பற்றி அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் பெறாமல் வெள்ளோட்டம் பார்த்துள்ளனர்’’ என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.