Last Updated : 09 Dec, 2014 09:08 PM

 

Published : 09 Dec 2014 09:08 PM
Last Updated : 09 Dec 2014 09:08 PM

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு நாளை நோபல் பரிசு வழங்கப்படுகிறது

இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் பெண் குழந்தைகள் கல்வி உரிமைப் போராளி மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கு நாளை (புதன்கிழமை) நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

2014-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விருது வழங்கும் விழா, நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இன்று நடைபெறவுள்ளது. இவ்விருவருக்கும் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 6 கோடியே 20 லட்சம்) பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

நோபல் அமைதி விருது பெறுவதற்காக ஓஸ்லோ வந்துள்ள கைலாஷ் சத்யார்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த பரிசை இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். இந்த விருது குழந்தைகளுக்கும், இந்திய மக்களுக்கும்தான் சொந்தம். குழந்தைகள் உரிமைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வரும் நீதிமன்றத்துக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகள் உரிமைக்காக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட வேண்டும்.

விலங்குகளைப் போல குழந்தைகள் விற்கப்படுகின்றனர். சில குழந்தைகள் விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர்; பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்படுகின்றனர்; போராளிகளாக்கப்படுகின்றனர். குழந்தைகளின் உரிமைக்காக போராட உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது” என்றார்.

மலாலா கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது. இது அமைதிக்கான மதம், ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த மதத்தைப் பற்றி அறியாமல் சிலர் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றார்.

இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளோருக்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நாளை நடைபெறவுள்ள விழாவில் பரிசளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x