சுனாமியால் பிரிந்த மகன், மகள்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த பெற்றோர் - கனவால் மீண்டும் ஒன்று சேர்ந்த குடும்பம்

சுனாமியால் பிரிந்த மகன், மகள்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த பெற்றோர் - கனவால் மீண்டும் ஒன்று சேர்ந்த குடும்பம்
Updated on
1 min read

இந்தோனேசியாவில் சுனாமியால் பிரிந்த மகனையும் மகளையும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர். தாய்மாமனுக்கு இரவில் அடிக்கடி வந்த கனவால் அந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மெலோபோ நகரைச் சேர்ந்தவர் செப்டி ரங்குட்டி. இவரது மனைவி ஜமாலியா. இத்தம்பதிக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தன. இவர்களின் வீடு கடற்கரையோரம் இருந்தது. கடந்த 2004 டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமியின்போது குடும்பத்தினர் ஒரே பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அலைகளில் சிக்கி சிதறியடிக்கப்பட்டனர். இறுதியில் தாய், தந்தை, மூத்த மகன் ஜாரி மட்டுமே உயிர் பிழைத்தனர்.

7 வயதான இளைய மகன் ஆரிப், 4 வயதான மகள் ஜனா ஆகியோரை காணவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்களாக மகனையும் மகளையும் பெற்றோர் தேடி அலைந்தனர். அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதன்பிறகு தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான்.

தாய்மாமனின் கனவு

சிறுமியான ஜனா மீது அவரது தாய்மாமன் ஜைனுதீன் மிகுந்த பாசம் வைத்திருந்தார். கடந்த ஜூலை மாதம் அவரது கனவில் 14 வயது சிறுமியாக ஜனா தோன்றினாள்.

அடிக்கடி அவரது கனவில் ஜனா வந்ததால் அவளை மீண்டும் தேடத் தொடங்கினார். ஜூலை மாத இறுதியில் பிலாங்பிடி என்ற பகுதியில் ஜனாவை அவர் கண்டுபிடித்தார். ஒரு மீனவக் குடும்பத்தில் வளர்ப்பு மகளாக இருந்த ஜனா, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த குடும்பத்தில் இணைந்தார்.

இந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிய செப்டி ரங்குட்டியும் ஜமாலியாவும் காணாமல்போன தங்களது மகனையும் தேடத் தொடங்கினர். இந்த குடும்பத்தைச் பற்றிய செய்தி உள்ளூர் நாளிதழ்களில் வெளியானது. இதை படித்த மேடன் என்ற பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர், தெருவில் ஆதரவற்று திரிந்த ஆரிப்பை கண்டுபிடித்து அவரது குடும்பத்தில் ஒப் படைத்தார்.

சுனாமியில் தொலைந்துபோன மகனும் மகளும் மீண்டும் கிடைத்திருப்பதை பெற்றோர் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சுனாமியால் பிரிந்த குடும்பம் தாய்மாமனின் கனவால் மீண்டும் ஒன்று சேர்ந்த சுவாரசியமான சம்பவம் இந்தோனேசியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in