

பாகிஸ்தானில் தீவிரவாத வழக்குகளை விரைந்து விசாரிக்க ராணுவ நீதிமன்றங்களை அமைக்க அந்த நாட்டு அரசியல் கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உட்பட 150 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த தடை அண்மையில் நீக்கப்பட்டு சுமார் 500 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாதில் நேற்றுமுன்தினம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. சுமார் 11 மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் தீவிரவாத வழக்குகளை விசாரிக்க ராணுவ நீதிமன்றங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.